கோலாலம்பூர், செப். 22 - அண்மையில் நிகழ்ந்த நாட்டின் கெளரவத்திற்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் சம்பவத்தைத் தொடர்ந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) மற்றும் கே.எல்.ஐ.ஏ.2 இல் சட்டவிரோத டாக்சி நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று போக்குவரத்து அமைச்சு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கே.எல்.ஐ.ஏ.2இல் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு அதிக கட்டணம் விதித்து ஏமாற்றிய நபரை சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) கைது செய்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் கே.எல்.ஐ.ஏ. 2 முனையத்தில்
ஒரு வெளிநாட்டு சுற்றுப் பயணி சட்டவிரோத டாக்சி ஓட்டுநரால் ஏமாற்றப்பட்டதாக சமூக ஊடகங்களில் வைரலான பதிவு ஒன்று தெரிவித்தது.
தொடக்கத்தில் அவருக்கு 60 வெள்ளி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பின்னர் காரை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 800 வெள்ளியை செலுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட வாகனத்தைக் கண்டுபடிக்க நான் உடனடியாக ஜே.பி.ஜே.வுக்கு உத்தரவிட்டேன். நேற்று கே.எல்.ஐ.ஏ.வில் மேற்கொள்ளப்பட்ட ரகசிய நடவடிக்கையைத் தொடர்ந்து அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
அவரது கார் அந்த இடத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டதோடு மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது என்று லோக் இன்று முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட காரின் புகைப்படங்களையும் லோக் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். மேலும் சம்பவத்திற்கு விரைவான பதிலடி கொடுத்ததற்காக ஜே.பி.ஜே. அதிகாரிகளை அவர் பெரிதும் பாராட்டினார்.
செப்டம்பர் 15 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள தனது ஹோட்டலுக்கு செல்ல பேருந்து தேடிக்கொண்டிருந்த ஒரு வெளிநாட்டுப் பயணியை உள்ளூர்வாசி ஒருவர் அணுகி 60 வெள்ளி கட்டணத்தில் டாக்சி சேவை வழங்க முன்வந்தார்.
இருப்பினும், ஹோட்டலுக்கு அருகில் காரை நிறுத்த மறுத்த அந்த ஓட்டுநர் அதற்கு பதிலாக ஓர் ஒதுக்குப்புறமான பகுதிக்கு காரைத் திருப்பி பயணியை விடுவிப்பதற்கு முன்பு முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டணத்தை விட 14 மடங்கு அதிகமாக அதாவது 836 வெள்ளியைக் கோரினார்.