கோலாலம்பூர், அக். 16 – ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான முன்னோடித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த, மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) உள்ளிட்ட விமானப் போக்குவரத்து அமைப்புகளைத் திட்டத்தின் தொடக்கக் கட்டத்திலேயே இணைத்துக்கொள்ள வேண்டும்.
இதனைசிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
ட்ரோன் தொழில்நுட்பம் மலேசியாவில் வளர்ந்து வரும் புதிய துறையாக இருப்பதுடன், அது தொடர்பான பல திட்டங்கள் இன்னும் சோதனைக் கட்டத்திலேயே உள்ளன.
எனவே, வணிக ரீதியிலான செயல்பாடுகளுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது அவசியம் என அமிருடின் வலியுறுத்தினார்.
தொடக்கத்திலிருந்தே அவர்களை இணைத்துக்கொண்டால், திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிவதுடன், ஒழுங்குமுறை தொடர்பான தடைகளையும் தவிர்க்க முடியும்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டம் தொடர்பான மாநில அரசுத் துறைகளுடனான கலந்துரையாடல் அமர்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அமிருடின் இதனைத் தெரிவித்தார்.
அந்தக் கலந்துரையாடல் அமர்வின்போது, சிலாங்கூர் ஏவியேஷன் அண்ட் டெக்னாலஜி இன்னோவேஷன் சென். பெர்ஹாட் (SELATI) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸான்னிஃபா அஸுரா அஹ்மாட், மேம்பட்ட வான்வழிப் போக்குவரத்து தொழில்நுட்பங்களை (Advanced Air Mobility – AAM) சோதிப்பதற்கான சிறப்புத் தளத்தைச் சிலாங்கூரில் உருவாக்க முன்மொழிந்தார்.
இந்த AAM சோதனைத் தளம், ட்ரோன்கள் மற்றும் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் தொழில்நுட்பங்களைப் பரிசோதிப்பதற்கும், அவற்றின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சம்பந்தப்பட்ட மாநில அரசுத் துறைகள் அமைப்புகளின் ஆதரவைப் பெறுவதற்கும், இத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை ஈர்ப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்கிடையில், சிலாங்கூர் ஏவியேஷன் ஷோ (SAS) நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவது குறித்தும் கலந்துரையாடலில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
2027ஆம் ஆண்டுக்கான மாநில வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்துப் பேசிய அமிருடின், ஏற்கெனவே வலுவாக உள்ள குறைக்கடத்தித் தொழில் உள்ளிட்ட துறைகளுக்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதுடன், புதிய துணைத் தொழில்துறைகளில் உருவாகும் வாய்ப்புகளையும் மாநில அரசு ஆராயும் என்றார்.
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான மாநில வரவுசெலவுத் திட்டத்தில் பொதுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும் என அமிருடின் தெரிவித்தார்.
குறிப்பாக, சாலைப் பராமரிப்பில் காணப்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பது, வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பது மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஆகியவற்றை இலக்காகக் கொண்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.







