உலு சிலாங்கூர், அக்.16 –உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள ஏழு முகாம் தளங்களுக்கு உலு சிலாங்கூர் நகராட்சி மன்றம் (MPHS) இயக்க உரிமங்களை வழங்கியுள்ளது. மேலும் 12 முகாம் தளங்களுக்கான உரிம விண்ணப்பங்கள் தற்போது ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
முகாம் தளங்களை முறையாகப் பதிவு செய்து, பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அவை செயல்படுவதை உறுதிசெய்ய இந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு நிகழ்ந்த பாத்தாங் காலி நிலச்சரிவுப் பேரழிவைத் தொடர்ந்து முகாம் தளங்களை முறைப்படுத்தும் நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதாக MPHS தலைவர் ஜூலைஹா ஜமாலுடின் கூறினார். அந்தத் துயரச் சம்பவத்தில் 13 சிறார்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.
“முகாம் தளங்களை முறைப்படுத்துவது என்பது அவற்றை நடத்துவோரிடம் உரிமம் இருப்பதையும், அவர்கள் சட்டப்பூர்வமாகத் தொழில் நடத்துவதையும் உறுதிப்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.
அதைவிட முக்கியமாக, அங்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பும் சுகாதாரமும் முறையாகப் பேணப்படுவதை உறுதிசெய்வதே எங்களது முதன்மை நோக்கமாகும்,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இந்த முறைப்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் மொத்தம் 63 முகாம் தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜூலைஹா கூறினார்.

ஜூலைஹா ஜமாலுடின்
இதுவரை உரிமம் பெறாத முகாம் தளங்களை நடத்துவோர், தேவையான நடைமுறைகளைப் பின்பற்றி MPHS உடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நகராட்சி மன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால் அல்லது திடீரென நீர்ப்பெருக்கு ஏற்படுவதால் உருவாகக்கூடிய அபாயங்களைக் குறைக்க முகாம் தளங்கள் ஆற்றின் கரையிலிருந்து குறைந்தது 20 மீட்டர் தொலைவில் அமைந்திருக்க வேண்டும்.
குறிப்பாக, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களின் அபாயம் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக ஜூலைஹா தெரிவித்தார்.
தித்திவாங்சா மலைத்தொடரை ஒட்டியுள்ள உலு சிலாங்கூர் மாவட்டத்தின் புவியியல் அமைப்பும், மாவட்டத்தின் 60 விழுக்காட்டுக்கும் அதிகமான நிலப்பரப்பில் காடுகள் காணப்படுவதும் இயற்கைச் சுற்றுலாவுக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளதாக ஜூலைஹா கூறினார்.

தூய்மையான ஆறுகள், பழத்தோட்டங்கள் மற்றும் இயற்கை எழில் நிறைந்த சுற்றுப்புறங்கள் காரணமாக இப்பகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் சில நில உரிமையாளர்கள் தங்களது பழத்தோட்டங்களின் ஒரு பகுதியை முகாம் தளங்களாக மாற்றியுள்ளனர்.
இத்தகைய முயற்சிகள் நில உரிமையாளர்களுக்குக் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதுடன், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இயற்கையுடன் நெருக்கமாக நேரத்தைச் செலவிடுவதற்கும் வழிவகுப்பதாக அவர் கூறினார்.
“இருப்பினும், மக்கள் முகாமிட வரும்போது, முகாம் நடத்துவோரின் பொறுப்பு என்பது தங்குவதற்கான இடத்தையும் கூடாரங்களை அமைப்பதற்கான வசதியையும் வழங்குவதுடன் முடிந்துவிடாது. வருகையாளர்களின் பாதுகாப்பையும் முறையான சுகாதார வசதிகளையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், முகாம் தளங்களின் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரிப்பதும் உரிமம் பெறுவதற்கான முக்கிய நிபந்தனைகளில் அடங்குவதாக அவர் தெரிவித்தார். முறையான குப்பை அகற்றல், கழிப்பறை வசதிகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளைப் பராமரித்தல் ஆகியவை இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.
குறிப்பாக, கழிவுநீர்த் தொட்டிகள் நிரம்பி வழிந்தால், கழிவுநீர் ஆற்றுக்குள் கலக்கும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். இதனால் ஒரு முகாம் தளம் மட்டுமின்றி, ஆற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மற்ற முகாம் தளங்களும் பாதிக்கப்படக்கூடும் என்றார்.







