2027 சிலாங்கூர் பட்ஜெட்: வீடற்றோருக்கு உதவ சிலாங்கூர் அரசு சிறப்பு செயல்முறையை உருவாக்க வேண்டும்

13 அக்டோபர் 2026, 3:10 AM
2027 சிலாங்கூர் பட்ஜெட்: வீடற்றோருக்கு உதவ சிலாங்கூர் அரசு சிறப்பு செயல்முறையை உருவாக்க வேண்டும்

ஷா ஆலாம், அக். 13 – சிலாங்கூரில் குறிப்பாக காஜாங் பகுதியில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு உதவ மாநில அரசு சிறப்பு செயல்முறையையோ தனி அமைப்பையோ உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் கியான் யோங் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சிறைச்சாலை அல்லது மருத்துவமனை போன்ற நிறுவனங்களிலிருந்து விடுவிக்கப்படும் சிலர், பின்னர் வீடற்றவர்களாகப் பொது இடங்களில் தங்கும் நிலைக்குத் தள்ளப்படுட்டுள்ளனர்.

இத்தகையோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, உரிய உதவிகளைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம் என்றார் டேவிட் சியோங்.

வீடற்றோர் பிரச்சனை என்பது வெறும் சமூக நல உதவிகளுடன் முடிந்துவிடும் விவகாரம் அல்ல, அவர்களின் மறுவாழ்வு, மனநலம் மற்றும் சமூக ஆதரவு ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து அணுக வேண்டியிருப்பதாக மீடியா சிலாங்கூரின் SKOP நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது டேவிட் சியோங் தெரிவித்தார்.

இதற்குத் தீர்வுகாணும் வகையில், வீடற்றவர்களுக்கான உதவிகள், ஆலோசனைகள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கென மாநில அரசு தனிப் பிரிவு அல்லது சிறப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

வீடற்றவர்களின் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் பொறுப்பை ஓர் அமைப்பிடம் மட்டுமே ஒப்படைத்துவிட முடியாது, பல்வேறு அரசாங்கத் துறைகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக நலத்துறை, சுகாதாரத் துறை, மறுவாழ்வு அமைப்புகள் மற்றும் தொடர்புடைய முகமைகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும்போது, வீடற்றவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மேலும் பயனுள்ளதாக அமையும்.

எனவே, நகர்ப்புறங்களில் நிலவும் வீடற்றோர் பிரச்சனையைச் சமாளிப்பதற்கான இந்த முன்மொழிவைச் சிலாங்கூர் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டேவிட் சியோங் கேட்டுக்கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.