போதையில் விபத்து ஏற்படுத்தினால் இழப்பீடு கட்டாயம்: 2027 தொடக்கத்தில் சட்ட மசோதா தாக்கல்

12 அக்டோபர் 2026, 12:47 PM
போதையில் விபத்து ஏற்படுத்தினால் இழப்பீடு கட்டாயம்: 2027 தொடக்கத்தில் சட்ட மசோதா தாக்கல்

ஷா ஆலாம், அக்.12 - மது அல்லது போதைப்பொருள் போதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதைக் கட்டாயமாக்கும் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத் திருத்த மசோதா அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இது குறித்த கொள்கை முடிவுக்குப் அமைச்சரவை சில மாதங்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், தற்போது சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்துடன் இணைந்து அதற்கான திருத்த வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தொழில்நுட்ப விவகாரங்களை ஆராய வேண்டியிருப்பதால் இந்த வரைவு தயாரிப்புக்கு சற்று கால அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நடைமுறைப்படி, போதையில் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற வேண்டுமானால், அவர்கள் தனியாகச் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்.

இதனால் வசதி இல்லாத மக்கள் வழக்கறிஞர் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிப்பதோடு, இழப்பீடு கிடைக்கப் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாக, குற்றவியல் மற்றும் சிவில் விசாரணை ஆகிய இரண்டையும் ஒரே அமைப்பிற்குள் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை வழங்கும் அதே வேளையில், நீதிபதியே பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீட்டையும் பெற்றுத் தர இந்தச் சட்டத்திருத்தம் வகை செய்யும்.

இந்தத் திருத்தத்தில் இஸ்லாமியச் சட்டத்தின் 'தியாத்' (Diyat - இழப்பீடு வழங்கும் கோட்பாடு) கொள்கைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்று அந்தோனி லோக் விவரித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.