பழைய பிறப்புச் சான்றிதழ்கள் தொடர்ந்து செல்லுபடியாகும்; புதிதாக மாற்ற அவசியமில்லை

12 அக்டோபர் 2026, 9:17 AM
பழைய பிறப்புச் சான்றிதழ்கள் தொடர்ந்து செல்லுபடியாகும்; புதிதாக  மாற்ற அவசியமில்லை

குவா மூசாங், அக். 12 – காகித வடிவில் கையால் எழுதப்பட்டு வழங்கப்பட்ட பழைய பிறப்புச் சான்றிதழ்கள் உட்பட, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து பிறப்புச் சான்றிதழ்களும் தொடர்ந்து செல்லுபடியாகும்.

இதனால் அவற்றைப் புதிய வடிவத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என தேசியப் பதிவுத் துறை (JPN) தலைமை இயக்குநர் டத்தோ பட்ருல் ஹிஷாம் அலியாஸ் தெரிவித்தார்.

அவர் இதனை 78ஆவது தேசியப் பதிவுத் தினத்தை முன்னிட்டு, கிளந்தான் மாநில அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட பதிவுத்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பழைய பிறப்புச் சான்றிதழ்களை வைத்திருப்போர், தற்போதைய புதிய வடிவிலான சான்றிதழைப் பெற விரும்பினால், நாட்டிலுள்ள எந்தவொரு தேசியப் பதிவுத் துறை அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஐந்து ரிங்கிட் கட்டணம் செலுத்தி பிறப்புச் சான்றிதழின் நகலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள், கையால் எழுதப்பட்ட விவரங்களைக் கொண்ட பழைய காகித அட்டை வடிவிலான ஆவணங்கள் உட்பட அனைத்தும் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம் என பட்ருல் ஹிஷாம் தெளிவுப்படுத்தினார்.

புதிய வடிவிலான பிறப்புச் சான்றிதழ் தேவைப்படுவோர் அதற்கான நகலைப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்ப நடைமுறையை ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒருவரின் பிறப்பு தொடர்பான ஆவணப் பதிவு, சட்டப்பூர்வ அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை அம்சமாகும்.

சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட அடையாளம் இருப்பதன் மூலம், மலேசியக் குடிமக்கள் தங்களுக்குரிய உரிமைகள் மற்றும் பல்வேறு அரசாங்கச் சேவைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

பிறப்புப் பதிவு மற்றும் அடையாள ஆவணங்களைப் பெற்றிருப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பட்ருல் ஹிஷாம் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, நாட்டின் உள்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடி சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பதிவுத்துறைச் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்ய தேசியப் பதிவுத் துறை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, பழைய பிறப்புச் சான்றிதழ்களை வைத்திருப்போர் அவற்றை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்பதுடன், புதிய வடிவிலான சான்றிதழ் தேவைப்படுவோர் அருகிலுள்ள தேசியப் பதிவுத் துறை அலுவலகத்தில் ஐந்து ரிங்கிட் கட்டணத்தில் விண்ணப்பிக்கலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.