ஷா ஆலம், அக் 13: மாநில ஹலால் தொழில் சூழல் மேலும் வலுப்பெற, ஜாக்கிமுடன் இணைந்து சான்றிதழ் வழங்கும் செயல்முறையை விரைவுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு செயல்முறை காலத்தைச் சுருக்குவதோடு, அதற்கான நிதியையும் ஒதுக்கி வருகிறது. மேலும் சிலாங்கூர், ஹலால் சான்றிதழுக்கு முதல்முறையாக விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு, 30 நாட்களுக்குள் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு முடிவை வழங்கும் உத்தரவாதம் அளித்த முதல் மாநிலமாகும் என சிலாங்கூர் மாநில ஹலால் தொழில் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது ஃபஹ்மி ஙாக தெரிவித்தார்.
“அதே நேரத்தில், சான்றிதழ் புதுப்பிப்புக்கான விண்ணப்பங்கள் 7 நாட்களுக்குள், அல்லது 48 மணிநேரத்திற்குள் முடிவடையும். இனி எந்த நிறுவனமும் ‘சான்றிதழ் கிடைக்கவில்லை’ என்ற காரணத்தைச் சொல்ல முடியாது,” என அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
மேலும் சர்வதேச சந்தையை அடைய முடியாமல் திணறும் ஹலால் தொழில் முனைவோர்களுக்கும் அரசு பல வழிகளில் உதவி செய்து வருகிறது. தொழில் முனைவோர் மேலும் புதுமையான முறையில் செயல்பட்டு, வெளிநாட்டு சந்தையில் விற்கக்கூடிய பல்வேறு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.