கோலாலம்பூர், அக். 11 — தேசிய உயர்கல்விக் கடன் நிதிக் கழகத்தின் (PTPTN) கல்விக் கடனை நிலுவையின்றி, தவறாமல் திருப்பிச் செலுத்தும் கடனாளிகளுக்கு 2027ஆம் ஆண்டு முதல் 10 விழுக்காடு கழிவு வழங்கப்படவுள்ளது.
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஒழுங்கையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்கும் கடனாளிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தச் சலுகை அறிமுகப்படுத்தப்படுவதாக PTPTN தலைவர் டத்தோ ஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்தும் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், கடன் தவணைகள் நிலுவையில் சேரும் அபாயத்தைக் குறைப்பதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இதற்கிடையில், 2027ஆம் ஆண்டில் PTPTN கல்விக் கடன் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்கும் திட்டத்தையும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 4 லட்சத்துக்கும் அதிகமான கடனாளிகள் பயனடைவார்கள்.
மேலும், குறைந்த வருமானம் பெறும் கடனாளிகளுக்கு மாதாந்திர குறைந்தபட்சக் கடன் திருப்பிச் செலுத்தும் தொகையாக RM50 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்லிசா கூறினார்.
இந்தச் சலுகைகளைச் செயல்படுத்துவதற்கு முன்பாக, கடனாளிகளின் வருமான விவரங்கள் உள்நாட்டு வருவாய் வாரியத்தின் (LHDN) தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.
இதனிடையே, தங்களது ஊழியர்களின் PTPTN கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முதலாளிகளுக்கு வரி விலக்கு வழங்கும் மற்றொரு திட்டமும் அறிவிக்கப்பட்டது.
இந்த முயற்சி, ஊழியர்களின் கடன் சுமையைக் குறைப்பதற்கும் அவர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் முதலாளிகள் பங்களிக்க ஊக்கமளிக்கும்.
உயர்கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பாக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள இலக்குகளையும் நோக்கங்களையும் நிறைவேற்ற PTPTN தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.






