ஷா ஆலாம், அக். 10 – அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு மத்தியில் மக்களின் நலனைப் பாதுகாப்பதுடன், நாட்டின் நிதிப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் வகையில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மொத்தம் RM510 பில்லியன் மதிப்பிலான இந்த மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிலைத்தன்மை மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை முன்னிறுத்துவதுடன், அரசாங்கத்தின் நிதி நிர்வாகப் பொறுப்பையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நிலவும் மோதல்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு, பல நாடுகள் விநியோக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பதற்கு இந்த வரவு செலவுத் திட்டம் உதவும் என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பத்து அணை, கிள்ளான் கேட்ஸ் அணை மற்றும் நீர்த்தேக்கக் குளங்களின் கொள்ளளவை விரிவுபடுத்துவதற்காக RM100 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பது திடீர் வெள்ளப் பிரச்சனைகளைக் குறைப்பதுடன், பொதுமக்களின் கவலையையும் தணிக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) நிதியுதவி ஒதுக்கீடு RM57 பில்லியனாக அதிகரிக்கப்பட்டிருப்பதையும் அமிருடின் வரவேற்றார்.
மக்களுக்கு உதவும் வகையில் RM72.9 பில்லியன் மானியங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கான நிதி அதிகரிக்கப்பட்டிருப்பது, அத்துடன் குறைந்தபட்ச மாத ஊதியம் RM2,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பது ஆகியவை முக்கியமான நடவடிக்கைகள் என அவர் குறிப்பிட்டார்.







