ஷா ஆலம், அக் 7: சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ் , தமது 25 ஆண்டுகால ஆட்சிப் பூர்த்தியை நினைவுகூரும் வெள்ளி விழாவிற்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ‘கெரிஸ் ஜூப்ளி பேராக்’ என்ற பாரம்பரிய மலாய் கெரிஸ்-சைப் பெற்றுக் கொண்டார்.
இந்த வெள்ளி விழா கெரிஸ் சுல்தானின் ஆட்சிப் பயணத்தையும் சிலாங்கூரின் அடையாளத்தையும் குறிக்கும் பல குறியீடுகளைத் தன்னுள் கொண்டுள்ளது என சிலாங்கூர் அரண்மனை தமது முகநூல் பதிவில் பகிர்ந்துக் கொண்டது.

கெரிஸ்-சின் 25 அங்குல நீளம், சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சியையும், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஏழு வகையான இரும்புகள் வலிமையின் ஒற்றுமையையும் அடையாளப்படுத்துகின்றன.

மேலும், அதிலுள்ள வெள்ளை பருந்தின் அம்சம் துணிச்சலையும், கருப்பு மூலிகை மரம் ( Black Healer Wood )மலாய் பாரம்பரிய நம்பிக்கைகளையும், எருமைக்கொம்பு கைவினைத்திறனின் நுணுக்கத்தையும் பறைசாற்றுகின்றன.
கெரிஸ்-சில் பதிக்கப்பட்டுள்ள ஒன்பது ரத்தினக் கற்கள் சிலாங்கூரின் ஒன்பது மாவட்டங்களை குறிக்கின்றன.
சுல்தானின் ஒப்புதலோடு இறுதி செய்யப்பட்ட இந்த வடிவமைப்பை, சிறந்த கைவினைக் கலைஞர்கள் கொண்டு முழுமையாக உருவாக்கி முடிக்க 12 மாதங்கள் ஆகின.

இந்த கெரிஸ் சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சியை நினைவுகூருவது மட்டுமின்றி, மலாய் பாரம்பரியக் கலையின் செழுமையையும், அதை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கும் கைவினைக் கலைஞர்களின் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.







