ஷா ஆலம், ஜனவரி 6: பெட்டாலிங் ஜெயா, தாமான் டேசா பெட்டாலிங் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரோடுவா பெஸ்ஸா காரில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விவகாரம் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் அம்பலமானது.
அதிகாலை 3 மணியளவில் கோலாலம்பூர் மலேசிய சுங்கத்துறை அமலாக்கப் பிரிவின் (JKDM) அதிகாரிகள் குழு இந்தச் சோதனையை நடத்தியது. வாகனத்தைச் சோதனையிட்டபோது, பின் இருக்கையில் இரண்டு பைகளில் ஷயாபு என சந்தேகிக்கப்படும் படிக வடிவிலான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் சுங்கத்துறை இயக்குநர் வான் நோரிசான் வான் தாவுட் கூறினார்.
"11.031 கிலோகிராம் எடையுள்ள, RM352,992 மதிப்புள்ள ஷயாபு போதைப்பொருள் உள்ளூர் சந்தைக்காகக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. வாகனத்தின் உரிமையாளர் விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது," என்று கோலாலம்பூர் சுங்கத்துறை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
சந்தேக நபரின் பங்கு அல்லது பெரோடுவா பெஸ்ஸா கார் வேறு நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டதா என்பதைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த போதைப்பொருள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, பின்னர் உள்ளூர் சந்தையில் சில்லறையாக விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். "பொது வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களில் போதைப்பொருட்களைப் பதுக்கி வைக்கும் தந்திரம், உள்ளூர் மக்களின் சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காகும்," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு 1952ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டம், பிரிவு 39B(1)(a)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.


