ஷா ஆலாம், அக். 6 — குறுகியகால வாடகை தங்குமிடங்கள் எனப்படும் STRA தொடர்பான திட்டமிடல் வழிகாட்டுதல்கள், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சுடன் (MOTAC) இணைந்து இறுதிக்கட்ட மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் பின்னர் அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
STRA துறையின் நிலையான, பாதுகாப்பான வளர்ச்சியை உறுதி செய்ய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் பரிசீலனைக்குப் பின்னர், இந்த ஆவணம் தேசிய உள்ளூராட்சி மன்றமான MNKT-யிடம் கூட்டு உடன்பாட்டிற்காக சமர்ப்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் மற்றும் ஊராட்சி அமைப்புகள் ஏற்றுக்கொள்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்படும் என்றும் ஙா தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வப் பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
STRA துறையை ஒழுங்குபடுத்துவதில், தங்குமிடங்களைப் பதிவு செய்வது, பாதுகாப்பு மற்றும் தூய்மைத் தரநிலைகளைப் பின்பற்றுவது, அத்துடன் STRA இயக்குநர்களின் பொறுப்புடைமை ஆகியவை முக்கிய அம்சங்களாகக் கருதப்படும்.





