ஷா ஆலாம், அக். 5 — மேரு பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் தேவையைப் பூர்த்தி செய்ய மேரு சுகாதார கிளினிக்கை மேம்படுத்தி, அதன் வசதிகளையும் சேவைகளையும் விரிவுபடுத்த வேண்டும்.
இதனை மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியம் அப்துல் ரஷீட் வலியுறுத்தியுள்ளார்.
மேரு சுகாதார கிளினிக்கில் தற்போது நாளொன்றுக்கு 1,000க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்நிலை அப்பகுதியில் சுகாதார சேவைகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சுகாதாரச் சேவைக்கான தேவையை எதிர்கொள்ள, தற்போதுள்ள சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு அமைச்சு முன்னுரிமை அளித்து வருவதாகதக் கடந்த ஏப்ரல் மாதம் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிலாங்கூர் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மரியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி வசதிகளை மேம்படுத்துதல், பொதுமக்களுக்கான அரசுச் சேவைகளை மேலும் இலக்கமயமாக்குதல் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், சிலாங்கூர் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருப்பதுடன், எந்தவொரு சமூகப் பிரிவினரும் புறக்கணிக்கப்படாத வகையில் அனைவருக்கும் பயனளிப்பதாக அமைய வேண்டும்.
இதனிடையே, 2027ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன் மொத்தச் செலவினம் RM440.9 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது வரலாற்றில் மிக உயர்ந்த ஒதுக்கீடாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வரும் நவம்பர் 13ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்கு முன்னதாக, சிலாங்கூர் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் RM3.23 பில்லியனை ஒதுக்கியிருந்தது.







