மிரி, அக் 4: தனது மனைவி அடிக்கடி டிக்டாக் செயலியைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட அதிருப்தியாலும் பொறாமையாலும், கணவன் ஒருவன் மனைவியின் வலது காது மடலை கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சரவாக்,மிரியின் துடான் ஃபேஸ் 6 (Tudan Phase 6) பகுதியில் உள்ள தம்பதியரின் இல்லத்தில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு சுமார் 9.26 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக மிரி மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் அவசர உதவிக்காக 'MERS 999' எண்ணைத் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்தே இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
அவசர அழைப்பைப் பெற்ற போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 49 வயதுடைய கணவனைக் கைது செய்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்நபருக்கு, கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி மிரி நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் RM2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







