அமெரிக்கா, செப் 17 - அமெரிக்காவில் சமூக ஊடக தளமான டிக்டோக் செயலி முடக்கப்படுவதைத் தவிர்க்க சீனாவுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், அமெரிக்க நிறுவனங்களின் குழு ஒன்று சமூக ஊடக தளமான டிக்டாக்கை வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
சீனாவை தளமாகக் கொண்ட ByteDance இடமிருந்து அமெரிக்காவில் டிக்டோக்கின் செயல்பாடுகளை எந்த நிறுவனம் வாங்கும் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.
எனினும், பேச்சுவார்த்தைகள் தொடரும் வேளையில், அமெரிக்காவில் டிக்டோக்கின் செயல்பாட்டை நிறுத்துவதற்கான தேதியை அவர் பலமுறை தாமதப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்தது.
சீனாவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை சீனா அதிபர் சி ஜின்பிங்குடன் பேசி அனைத்தையும் உறுதிப்படுத்தவிருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.
டிக்டோக் உரிமை குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க டிரம்பும் சி ஜின்பிங்கும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளதாகக் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.
பெய்ஜிங்குடன் தரவுப் பகிர்வு குறித்த சாத்தியத்தினால், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ByteDance அமெரிக்க செயல்பாடுகளை நிறுத்த அல்லது முழுமையான தடையை எதிர்கொள்ள செப்டம்பர் 17 ஆம் தேதி வரை டிக்டோக்கிற்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
பெர்னாமா