கோலாலம்பூர், அக். 20 – கெரெத்தாப்பி தானா மலாயு பெர்ஹாட் (KTMB) நிறுவனத்தின் பெயர் மற்றும் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தி, போலி வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறப்படும் ‘kerjaya.ktmb’ என்ற டிக்டொக் கணக்கு தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
பணியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்காக எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் நியமிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள KTMB, சம்பந்தப்பட்ட டிக்டொக் கணக்கு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடுவதுடன், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையில், உறுதிப்படுத்தப்படாத சமூக ஊடகக் கணக்குகள் அல்லது அதிகாரப்பூர்வமற்ற தளங்கள் மூலம் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனப் பொதுமக்களிடம் KTMB கேட்டுக்கொண்டது.
இதற்கிடையில், போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளைப் பரப்பிய விவகாரம் தொடர்பில் மேல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் KTMB தெரிவித்தது.
மேலும், மோசடி, ஆள்மாறாட்டம், நிறுவனத்தின் அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது சட்டவிரோதமான வேறு எந்தச் செயலிலும் தொடர்புடையவர்கள் எனக் கண்டறியப்படும் தரப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
KTMB நிறுவனத்தின் வேலைவாய்ப்பு வாய்ப்புகள், பணியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்பான தகவல்களைப் பெற விரும்புவோர், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.ktmb.com.my அல்லது அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்களை மட்டுமே நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த மோசடி முயற்சி குறித்து பொதுமக்களுக்குத் தகவல் பகிர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்திய சமூக ஊடகக் கணக்கின் உரிமையாளர் சையட் அல் ஹாஃபிஸுக்கும் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.
இதனிடையே, பெர்னாமா மேற்கொண்ட சோதனையில், சம்பந்தப்பட்ட ‘kerjaya.ktmb’ டிக்டொக் கணக்கு தொடர்ந்து அணுகக்கூடிய நிலையில் இருந்தது தெரியவந்தது. சோதனை மேற்கொள்ளப்பட்ட நேரத்திற்கு சுமார் 12 மணி நேரத்திற்கு முன்னதாக அந்தக் கணக்கில் கடைசிப் பதிவு வெளியிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.







