ஷா ஆலாம், செப்.30 — தொழில்துறையின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப திறன் வாய்ந்த மனிதவளத்தை உருவாக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் தொடர்பாக மனிதவள விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு TalentCorp பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தினார்.
அதில் சிலாங்கூரின் மனிதவளத் தயார்நிலை மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகள் குறித்து அவர் விரிவாகக் கலந்துரையாடினார்.
மனிதவள மேம்பாடு என்பது வெறுமனே பயிற்சிகளை வழங்குவதுடன் நின்றுவிடாமல், தொழில்துறையில் தேவைப்படும் திறன்கள், வேலைவாய்ப்புகளின் தன்மை மற்றும் வேலை சந்தையின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பாப்பாராய்டு தெரிவித்தார்.
இதனிடையே, TalentCorp நிறுவனம் தனது MyMAHIR மற்றும் Future Skills Talent Council எனப்படும் FSTC திட்டங்கள் தொடர்பான அணுகுமுறைகளையும் மாநில அரசிடம் விளக்கியது.
தொழில்துறையில் நிலவும் மனிதவளத் தேவை மற்றும் வேலைவாய்ப்புகளை அடையாளம் காணுதல், முக்கியமான திறன்களை நிர்ணயித்தல், அத்துடன் தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பயிற்சிகளை இலக்குடன் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், மாநில அரசு, முதலாளிகள், பயிற்சி வழங்குநர்கள் மற்றும் வேலை தேடுவோர் ஆகியோரை ஒரே கட்டமைப்பின் கீழ் இணைக்கும் தொழில்துறை சார்ந்த அணுகுமுறை குறித்தும் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில அரசு TalentCorp நிறுவனத்துடன் தனது ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் பாப்பாராய்டு கூறினார்.
இந்த ஒத்துழைப்பின் மூலம் அதிகமான தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், எதிர்கால தொழில்துறை மாற்றங்களையும் தேவைகளையும் எதிர்கொள்ள மாநிலத்தின் மனிதவளத்தைத் தயார்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.







