ஷா ஆலாம், செப் 29 - தனியாகக் குடும்பங்களை நிர்வகிப்பது மற்றும் துணையின்றிப் பிள்ளைகளை வளர்க்கும் சுமையைக் குறைக்கும் வகையில், சிலாங்கூர் 2027 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தனித்து வாழும் தந்தையர்களுக்கான (Single fathers) உதவிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
தனித்து வாழும் தந்தையர்கள் கணிசமான பொறுப்புகளைச் சுமக்கிறார்கள். குறிப்பாக அவர்களில் பலர் தங்கள் குடும்பங்களின் முதன்மை வருமானம் ஈட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று பாண்டமாரன் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் தக் சீ (Tony Leong Tuck Chee) தெரிவித்தார்.
"பல தனித்து வாழும் தந்தையர்கள் என்னைச் சந்திக்க வந்துள்ளனர். தனித்து வாழும் தாய்மார்களும் தந்தையர்களும் பெரும் சுமையைச் சுமக்கிறார்கள்.
ஏனெனில் அவர்களின் துணை இறந்திருக்கலாம் அல்லது அவர்களை விட்டுச் சென்றிருக்கலாம். இதனால் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவர்களிடமே உள்ளது.
அவர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு உதவுவதற்கு அரசாங்கம் மேலும் என்ன வழங்க முடியும் என்பதைப் பரிசீலிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் சமீபத்தில் மீடியா சிலாங்கூரின் 2027 ஸ்கோப் சிலாங்கூர் வரவு செலவுத் திட்ட (SKOP Belanjawan Selangor 2027) நிகழ்ச்சியில் கலந்து கொண்டுப் பேசினார்.

பல தனித்து வாழும் தந்தையர்கள் உதவிக் கோரி தனது அலுவலகத்திற்கு வந்துள்ளதாக டோனி லியோங் தக் சீ தெரிவித்தார்.
இப்பிரிவினருக்குப் பெரிய அளவிலான ஆதரவை வழங்குவதற்காக மாநில அரசு திட்டங்களில் ஒன்றான பிங்காஸ் எனப்படும் 'சிலாங்கூர் வாழ்க்கை நல்வாழ்வு உதவித் (Bantuan Kehidupan Sejahtera Selangor - BINGKAS) திட்டத்தை லியோங் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிபந்தனைகளின்படி, 18 மற்றும் அதற்குட்பட்ட வயதுடைய குறைந்தது இரு பிள்ளைகள் இருக்கும் தனித்து வாழும் தந்தையர்கள் பிங்காஸ் (BINGKAS) திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவிக்கு தகுதியானவர்கள் அத்தியாவசியப் பொருட்கள், கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளை வாங்குவதற்காக BINGKAS இ-வாலட் (e-wallet) மூலம் மாதத்திற்கு 300 ரிங்கிட்டைப் பெறுவார்கள்.

2026 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தின் கீழ், மாநில அரசு மேலும் பல திட்டங்கள் மூலம் தனது வாழ்க்கைச் செலவின உதவிகளை விரிவுப்படுத்தியது.
இதில் BINGKAS தம்பஹான் ( BINGKAS Tambahan -BINGKASAN) மற்றும் பிங்காஸ் பிளஸ் (BINGKAS PLUS) ஆகியவை அடங்கும்.





