ஷா ஆலாம், செப் 28 - காஜாங்கில், சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமாகவும், சமூக நல மையமாகவும் செயல்பட்டு வரும் குருத்வாரா சாஹிப் மொத்தமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது.
அத்தொகையில், 50,000 ரிங்கிட் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வழங்கினார். எஞ்சியத் தொகையை கூட்டரசு அரசாங்கம் வழங்கியுள்ளது.
குருத்வாரா சாஹிப்பின் புதிய மூன்றரை மாடி கட்டடத்தையும், 'தர்பார் சாஹிப்' முதன்மை வழிபாட்டு மண்டபத்தையும் தொடக்கி வைத்த போது, இந்த ஒதுக்கீட்டை அமைச்சர் அறிவித்தார்.

மிக நீண்ட கால வரலாற்றினைக் கொண்டுள்ள இந்த காஜாங் குருத்வாரா சாஹிப், அப்பகுதியைச் சுற்றியுள்ள சீக்கிய மக்களுக்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக சமய சேவையாற்றி வருகின்றது.
தற்போது அதன் கட்டட வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பதை அடுத்து, சுற்று வட்டார மக்களுக்கு அந்த வழிபாட்டுத் தலம் சமய சேவையுடன் , சமூக சேவையையும் மேலும் விரிவுப்படுத்துமென, அமைச்சர் கோபிந்த் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனிடையே, குருத்வாரா சாஹிப்பின் புதிய மூன்றரை மாடிக் கட்டடத்தின் கட்டுமானம் 2016-ஆம் ஆண்டிலேயே தொடங்கியதாக, அதன் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்தார்.
முதன்மை வழிபாட்டு மண்டபத்தின் தரம் உயர்த்தும் பணிகள் இவ்வாண்டு முழுமைப் பெற்றதாகவும் அவர் கூறினார்.
புதிய கட்டடத்தின் கீழ் மாடியில், பெரிய- நவீன சமயலறையும், இன வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் இலவச உணவு வழங்குவதற்கான இடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சீக்கியர்களின் முக்கிய சமூக சேவைகளில் ஒன்றாக, இந்த இலவச உணவு, அனைவருக்கும் சுடசுட பரிமாறப்படுவதாக ரஞ்சித் சிங் தெரிவித்தார்.
மேலும், புதிய கட்டடத்தில் நூல்நிலையம், அலுவலகம், இரண்டாவது வழிபாட்டு இடம், காஜாங் பஞ்சாபி கல்வி மையம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன், காஜாங் குருத்வாரா சாஹிப் கிட்டத்தட்ட 450 சீக்கிய குடும்பங்களுக்கு சிறந்த சமய - சமூக சேவையை வழங்கி வருகின்றது.





