மலாக்கா, செப். 27 – ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்காக சமூக மேம்பாட்டுத் துறை (KEMAS) நிர்வகிக்கும் 132 பாலர் பள்ளிகள் (Tabika) அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படத் தொடங்கவுள்ளன.
KEMAS தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஹனபியா மான் இதனைத் தெரிவித்தார்.
ஆட்டிசம் கொண்ட சிறப்புத் தேவையுடைய குழந்தைகளைச் சேர்ப்பதற்கான ஆரம்பத் தேர்வு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் அடுத்த மாதம் தொடங்கும். இதற்காக சுகாதார அமைச்சின் ஒத்துழைப்பு பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் புதிய வகுப்புகள் நாடு முழுவதும் சுமார் 2,000 ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பெற்றோரிடமிருந்து இத்திட்டத்தில் தங்களது குழந்தைகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பதாகவும் முகமட் ஹனபியா குறிப்பிட்டார்.
எனினும், ஒவ்வொரு வகுப்பிலும் 10 முதல் 15 குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.
இதனிடையே, ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்கான இந்த வகுப்புகளில் சேருவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்று, சம்பந்தப்பட்ட குழந்தைகள் சமூக நலத்துறையால் (JKM) வழங்கப்படும் மாற்றுத்திறனாளி அட்டை (OKU) வைத்திருக்க வேண்டும் என்பதாகும்.
இதன் மூலம் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளபடி அவர்களும் உதவித்தொகை அல்லது பிற உதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
ஆட்டிசம் கொண்ட குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரம்பகால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவை வழங்குவதுடன், அவர்களின் பெற்றோருக்கும் தேவையான வழிகாட்டுதலை வழங்கும் வகையில் இந்த வகுப்புகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







