கோலா லங்காட், ஜன 5: அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து மேலும் பல மழலையர் பள்ளிகளை திறக்க சிலாங்கூர் சமூக மேம்பாட்டுத் துறை (KEMAS), திட்டமிட்டுள்ளது.
தற்போது 800க்கும் மேற்பட்ட கெமாஸ் மழலையர் பள்ளிகளில் ஐந்து முதல் ஆறு வயது வரையிலான சுமார் 27,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனால், பல இடங்களில் இரண்டு அமர்வுகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என சிலாங்கூர் கெமாஸ் இயக்குனர் நூர் அஸ்மான் அப்துல் ரஹ்மான் கூறினார்.
“முக்கிய தடையாக இடப்பற்றாக்குறை உள்ளது. அதே நேரத்தில் கட்டணம் குறைவாக இருப்பதனால் பெற்றோரிடமிருந்து தேவை மிக அதிகமாக உள்ளது.
“எனவே, புதிய மழலையர் பள்ளிகளைத் திறக்க சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS) உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையுடனும் இணைந்து கெமாஸ் செயல்படுகிறது,” என்று அவர் கூறினார்.
கெமாஸ் 2025 விழாவில் குழந்தைகள் ஆற்றல் தினத்தின் ஒட்டுமொத்த சாம்பியனாக முடிசூட்டப்பட்ட கெமாஸ் சிலாங்கூரின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.


