புத்ராஜெயா, செப் 25 - ஒரு மாத காலத்திற்குள் தங்களின் சொத்து விபரங்களை அறிவிக்கும்படி, முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், அவரது மனைவி, 3 பிள்ளைகள் ஆகியோருக்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நோட்டிஸ் வழங்கவுள்ளது.
திங்கட்கிழமை சரவணன், அவரது மனைவி, இரு பிள்ளைகளுக்கு , 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 36-வது செக்க்ஷன் படி அந்த நோட்டிஸ் வழங்கப்படும்.
வெளிநாட்டில் இருக்கும் அவரது மற்றொரு பிள்ளைக்கு நவம்பரில் அந்த நோட்டிஸ் வழங்கப்படுமென, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் தெரிவித்தார்.
" அது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வந்து அவர்கள் அந்த நோட்டிசைப் பெற்றுக் கொள்வார்கள்" என அவர் கூறினார்.
அவர்களுக்கு 30 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த கால அவகாசம் போதவில்லை என்றால் அவர்கள் விண்ணப்பித்தால் கூடுதல் கால அவகாசம் தரப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
நான்காண்டுகளுக்கு முன், நிறுவனமொன்றுக்கு 1,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டு அனுமதிக்கு 1.09 மில்லியன் ரிங்கிட் கையூட்டுப் பெற்றதன் தொடர்பில் கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில், சரவணன் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.







