ஷா ஆலாம், செப் 24 - பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து, சிறுவன் ஒருவனை விடுவித்து விடுதலை செய்து உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக தேசிய சட்டத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு நோட்டீஸ் கடந்த செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக தேசிய சட்டத் துறை தெரிவித்துள்ளதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டடது.
கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி, உயர் நீதிமன்றம் 15 வயதான அந்தச் சிறுவனை விடுவித்து விடுதலை செய்தது. அச்சம்பவம் நடந்தபோது அச்சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தான் என சுட்டிக் காட்டி அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அச்சிறுவனுக்கு சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலுடன் பேராக்கில் உள்ள உலு கிந்தா பஹாகியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி காலை 9.20 மணி முதல் 9.35 மணிக்குள், பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு தேசிய இடைநிலைப் பள்ளியின் மாணவிகள் கழிவறையில், தனது பள்ளியில் படித்த 16 வயது மாணவியைக் கொலை செய்ததாக அச்சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்தக் கொலை குற்றச்சாட்டு குற்றவியல் சட்டம் செக்க்ஷன் 302-இன் கீழ் வாசிக்கப்பட்டது.
இருப்பினும், 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் செக்க்ஷன் 97(1)-இன் படி, 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது.
அதையடுத்து தற்காப்புத் தரப்பு, மருத்துவ- சட்ட ரீதியாக மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதற்கான தற்காப்புகளை முன் வைத்து அதனை வெற்றிகரமாக நிரூபித்ததை அடுத்து உயர் நீதிமன்றம் அச்சிறுவனை விடுவித்து விடுதலை செய்யும் தீர்ப்பை அளித்ததாக அச்சிறுவனின் வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் கூறியிருந்தார்.






