ஷா ஆலாம், செப். 23 — கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை லஞ்சம் வழங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட சம்பவங்கள் பற்றி 652 அரசு ஊழியர்கள் புகாரளித்தனர்.
அவர்களுக்கு மொத்தம் RM1.18 மில்லியன் வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தெரிவித்தது.
இவர்களில் 529 பேருக்கு வெகுமதியுடன் சான்றிதழும் வழங்க பரிந்துரைக்கப்பட்டதாகவும், மேலும் 123 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் SPRM தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களின் நேர்மையைப் பாராட்டுவதுடன், இந்த அங்கீகாரம் மற்ற அரசு ஊழியர்களுக்கும் ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக அமையும் என அவர் கூறினார்.
கடந்த 2012 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான அங்கீகாரங்களைப் பெற்றவர்கள் மலேசியக் காவல்துறை (PDRM) ஊழியர்களாகும். அந்த வகையில் மொத்தம் 437 பேர் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, குடிநுழைவுத் துறை (JIM) சார்பில் 64 பேரும், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (APMM) சார்பில் 33 பேரும், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் (KPDN) சார்பில் 21 பேரும் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில் நான்கு அமலாக்க நிறுவனங்களிலிருந்து மொத்தம் 54 பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.
பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களும் SPRM மேற்கொண்ட நேர்மை மற்றும் பின்னணி சோதனைகளிலும், PDRM-இன் குற்றப் பதிவுச் சோதனையிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.







