கோலாலம்பூர், செப். 23 — செராஸ், பண்டார் டாமாய் பெர்டானாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.
அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் பிளாக் ஏ அருகே ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, நிலத்தடியில் ஏற்பட்ட நீர்க்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு இரவு 9.03 மணியளவில் தங்களுக்கு கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் அஷ்ருல் ரியெசால் அஸ்பார் கூறினார்.
சுமார் 4.57 மீட்டர் உயரமுள்ள சரிவுப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக அஷ்ருல் ரியெசால் தெரிவித்தார்.
இருப்பினும், அப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மண்ணின் நிலை மற்றும் நீரின் ஓட்டம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை மற்றும் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.







