ஷா ஆலாம், செப்.22 — உயர் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளில் ஜெர்மனியுடன் தனது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சிலாங்கூர் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதில் குறைக்கடத்தி மற்றும் சிப் வடிவமைப்புத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதும் அடங்கும்.

மேலும், ஆசியான் சந்தையில் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் ஜெர்மன் நிறுவனங்களுக்கு சிலாங்கூரை நுழைவாயிலாக நிலைநிறுத்தும் முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் தெரிவித்தார்.
சிலாங்கூர் பிரதிநிதிகள் ஜெர்மனியின் பெர்லினில் அமைந்துள்ள Adlershof அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் மையத்திற்கு சென்று அங்குள்ள உயர் தொழில்நுட்பச் சூழலைப் பார்வையிட்டதாக அவர் கூறினார்.
அங்கு சுமார் 1,300 நிறுவனங்களும் 18 அறிவியல் கூடங்களும் ஒரே சூழலமைப்பில் இயங்கி வருகின்றன.
இது வர்த்தகம், ஆராய்ச்சி மற்றும் திறமையான மனிதவளத்தை ஒன்றிணைக்கும் கட்டமைப்பைக் கொண்டுள்ளதாக இங் சீ ஹான் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தில் Siemens Malaysia மற்றும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையமான MIDA-வின் பிராங்பேர்ட் அலுவலகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்தப் பயணம் மூலம் வளர்ந்து வரும் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மேம்பட்ட எரிசக்தி தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன்கள் வகிக்கும் பங்கு குறித்து பிரதிநிதிகளுக்கும் நேரடி புரிதல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம், முதலீடு, திறன் மேம்பாடு மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் சிலாங்கூர்–ஜெர்மனி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இந்தத் தொடர் சந்திப்புகள் அமைந்துள்ளதாக இங் சீ ஹான் சுட்டிக்காட்டினார்.







