புதிய மைகார்ட்-டில் Touch ’n Go அம்சம் நீக்கம்

17 செப்டெம்பர் 2026, 6:25 PM
புதிய மைகார்ட்-டில்  Touch ’n Go  அம்சம் நீக்கம்
புதிய மைகார்ட்-டில்  Touch ’n Go  அம்சம் நீக்கம்

கோலாலம்பூர், செப் 18 : நேற்று முதல் வெளியிடத் தொடங்கியுள்ள புதிய மைகார்டில் இனி 'டச் அண்ட் கோ' (Touch ’n Go) அம்சம் இடம் பெறாது என தேசிய பதிவுத் துறை தெரிவித்தது.

இந்த புதிய அடையாள அட்டை , நாட்டின் அதிகாரப்பூர்வ அடையாள ஆவணமாக பயன்படுத்துவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என தேசிய பதிவுத் துறை தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

"டச் அண்ட் கோ சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் பயனர்கள், டச் அண்ட் கோ இ-வாலட் (eWallet) அல்லது தனி டச் அண்ட் கோ அட்டை மூலமாக அந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்," என்று அது மேலும் கூறியது.

53 பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மைகார்டில் , முன்பக்கத்தில் 'டைனமிக் செக்யூரிட்டி ஹோலோகிராம்' (Dynamic Security Hologram) மற்றும் ஒரு வெளிப்படையான பகுதி (Transparent window) போன்ற மேம்பட்ட பாதுகாப்பு கூறுகள் உள்ளன.

அதே போல், பின்பக்கத்தில் அமலாக்கப் பணிகளுக்கான கியூஆர் குறியீடு (QR code) மற்றும் இரட்டைச் செயல்பாட்டு சில்லு (Dual-function interface chip) ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய மைகார்ட் போலி அடையாள அட்டைகள் உருவாக்கப்படுவதையும், தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுப்பதற்கான மேம்பட்ட அடையாள சரிபார்ப்புத் திறன்களைக் கொண்டுள்ளன.

'வெளிப்படையான பகுதி' அம்சம் மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தும்; கியூஆர் குறியீடு சரிபார்ப்பு மற்றும் அமலாக்கத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் என தேசியப் பதிவுத் துறை கூறியது.

இதற்கிடையில், டைனமிக் செக்யூரிட்டி ஹோலோகிராம் அம்சம் கோணம் மற்றும் வெளிச்சத்திற்கு ஏற்ப மாறும் முப்பரிமாண (3D) படத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும், புற ஊதா (UV) அம்சமானது புற ஊதா ஒளியின் கீழ் மட்டுமே தெரியக்கூடிய குறிப்பிட்ட பாதுகாப்பு கூறுகளைக் காட்டுகிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக ஜிலோச் வடிவங்களும் (Guilloche patterns) நுண்ணெழுத்தும்(Microtext) இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதோடு, இதில் உள்ள பாலிகார்பனேட் (Polycarbonate) அடுக்கு இந்த மைகார்ட் வெப்பம் மற்றும் இரசாயனங்களுக்குத் தாங்கக்கூடியதாக மாற்றி, அதன் நீடித்த உழைப்பை அதிகரிக்கிறது.

அச்சிடும் வசதியைக் கொண்டுள்ள 40 தேசியப் பதிவுத் துறையின் கிளைகளில் இந்த புதிய மைக்கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

அச்சிடும் வசதி இல்லாத இதர தேசியப் பதிவுத் துறை கிளைகளில் விண்ணப்பித்த ஐந்து வேலை நாட்களுக்குள் மைகார்ட் தயாராகிவிடும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.