மைக்காடை மாற்ற அவசரப்பட வேண்டாம்- ஜேபிஎன் அறிவுறுத்தல்

30 மே 2026, 6:57 AM
மைக்காடை மாற்ற அவசரப்பட வேண்டாம்- ஜேபிஎன் அறிவுறுத்தல்

கோலாலம்பூர், மே 29 (பெர்னாமா) -- தற்போதுள்ள மைக்காட் அடையாள அட்டை, அரசாங்க மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெறுவது உட்பட அனைத்து அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் இன்னும் செல்லுபடியாகும் என்பதால், மைக்காடை மாற்ற பொதுமக்கள் அவசரப்பட வேண்டாம் என்று தேசியப் பதிவுத் துறை (ஜேபிஎன்) அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு குறிப்பிட்ட தேதியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய பின்னரே புதிய கட்டமைப்புடைய மைக்காட் (MyKad Struktur Baharu) விநியோகிக்கப்படும் மற்றும் மாற்றப்படும் என்று ஜேபிஎன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடக்கமாக, புத்ராஜெயா ஜேபிஎன் தலைமையகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 ஜேபிஎன் அலுவலகங்களில் இந்தத் திட்டம் சந்திப்பு முறை (Janji Temu) மூலம் பல கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். பின்னர், படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்
படும்.

இந்த அணுகுமுறை, கவுன்டர்களில் நெரிசலைத் தவிர்ப்பதோடு, திட்டத்தைச் சீராகவும் ஒழுங்காகவும் செயல்படுத்துவதை உறுதி செய்யும் என ஜேபிஎன் கூறியது.

ஜேபிஎன் சந்திப்பு முறை மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கும், பழைய அடையாள அட்டைகளான பிளாஸ்டிக் அடையாள அட்டை (KPP), உயர் தர அடையாள அட்டை (KPT) மற்றும் மைக்காட் பதிப்பு 1 (MyKad Versi 1) வைத்திருப்பவர்களுக்கும் புதிய கட்டமைப்புடைய மைக்காட் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

KPP, KPT மற்றும் மைக்காட் பதிப்பு 1 வைத்திருப்பவர்கள், மூன்று ஆண்டுகளுக்குள் படிப்படியாகப் புதிய மைக்காட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் அம்சங்கள் மூலம் மைக்காட் வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் பாதுகாப்பு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று ஜேபிஎன் உறுதியளித்துள்ளது.

புதிய கட்டமைப்புடைய மைக்காட் தொடர்பான மேலும் தகவல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு (FAQ) ஜேபிஎன்-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

-- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.