இனம் கடந்த நட்பு – மலேசியாவின் அழகைச் சொல்லும் மூன்று தோழிகள்

16 செப்டெம்பர் 2026, 6:43 AM
இனம் கடந்த நட்பு – மலேசியாவின் அழகைச் சொல்லும் மூன்று தோழிகள்

ஷா ஆலாம், செப்.16 — திருமண மேடையில் மணப்பெண்ணான வினிஷாவின் இருபுறமும் சேலை அணிந்த இரு பெண்கள் நின்றிருந்தனர். ஒருபுறம் மலாய் இனத்தைச் சேர்ந்த ஆயின், மறுபுறம் கிறிஸ்தவரான அமண்டா. நடுவில் இந்தியரான வினிஷா. அந்தக் காட்சி வெறும் திருமண நாளின் அழகான தருணமாக மட்டுமல்லாமல், 12 ஆண்டுகளாக இனம், மதம், கலாசாரம் என எந்த வேறுபாடுகளும் தங்களது நட்பைத் தீர்மானிக்க விடாமல் பயணித்த மூன்று தோழிகளின் கதையாகவும் அமைந்தது.

வினிஷா, ஆயின், அமண்டா ஆகிய மூவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் கல்விக் கழகத்தில் ஆங்கில மொழிக் கற்பித்தல் பயின்றபோது சந்தித்தனர். விரிவுரையாளர் குழுப் பணியை வழங்கினால், வேறு யாரையும் தேடாமல் மூவரும் ஒன்றாகவே பணியாற்றுவார்கள். ஒன்றாக பணிகள், விளக்கவுரை செய்வது என தொடங்கிய அந்தப் பயணம், நாளடைவில் ஆழமான நட்பாக மாறியது. சில இரவுகளில் தூக்கத்தை மறந்து பாடங்கள் செய்ததும், ஒருவருக்கு பாடம் புரியவில்லை என்றால் மற்ற இருவரும் அமர்ந்து கற்றுக்கொடுத்ததும் அவர்களின் கல்லூரி வாழ்க்கையின் அன்றாட நினைவுகளாகின.

கல்லூரி நாட்களில் கிட்டத்தட்ட தினமும் ஒன்றாக உணவு சாப்பிட்ட மூவரும், தங்களது குடும்பங்களைப் பற்றி பேசுவதுடன், ஒருவரையொருவர் கிண்டல் செய்தும், சிரித்தும் நேரத்தை செலவிட்டனர். அவர்களுக்கிடையே இன மற்றும் மத வேறுபாடுகள் இருந்தாலும், அவை ஒருபோதும் நட்புக்குள் இடம் பெறவில்லை. “காலப்போக்கில் ஆயின் ‘மலாய் தோழி’ என்றும் அமண்டாவை ‘கிறிஸ்தவ தோழி’ என்றும் நான் பார்க்கவில்லை. அவர்கள் என் நெருங்கிய நண்பர்கள்,” என வினிஷா மீடியா சிலாங்ரிடம் தெரிவித்தார்.

ஆசிரியர் கல்விக் கழகத்தில் படிப்பை முடித்த பின்னர், மூவரின் வாழ்க்கைப் பாதைகளும் வெவ்வேறு திசைகளில் நகர்ந்தன. வினிஷா ஜொகூரிலும், மற்றொருவர் நெகிரி செம்பிலானிலும், இன்னொருவர் சபாவிலும் ஆசிரியர்களாகப் பணியாற்றத் தொடங்கினர். முன்பு தினமும் சந்தித்தவர்கள், பின்னர் வேலை, குடும்பம் மற்றும் வாழ்க்கைப் பொறுப்புகளால் அவ்வப்போது மட்டுமே சந்திக்க முடிந்தது. இருப்பினும், அவர்களுக்கிடையிலான தொடர்பு தொடர்ந்தது. வாட்ஸ்அப் மூலம் தினசரி வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டதுடன், ஒருவர் மற்றொருவரின் நலனை விசாரிப்பதும், சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அதனைப் பயன்படுத்திக்கொள்வதும் வழக்கமாக இருந்தது. “முன்பு எங்களுடைய உரையாடல்கள் கல்வியைப் பற்றியதாக இருந்தன. இப்போது பள்ளி, குடும்பம், வேலை மற்றும் வாழ்க்கை பற்றிப் பேசுகிறோம்,” என்றார் அமண்டா.

இதனிடையே, அமண்டாவின் திருமணத்திற்காக சபாவுக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட ஆயின், அந்தப் பயணத்தின் மூலம் கிறிஸ்தவ சமூகத்தின் கலாசாரத்தையும் பாரம்பரியங்களையும் அறிந்துகொள்ள முடிந்ததாகக் கூறினார்.

“நான் என்ன உனவு சாப்பிடலாம், எது ஹலால் என்பதையும் என் இரு தோழிகளும் நன்கு அறிந்திருந்தனர். அதனால், நான் எதையும் தயக்கமின்றி சாப்பிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது என்றார்.

அதேவேளை, தங்களது நட்பில் மறக்க முடியாத பல நினைவுகள் இருப்பதாகக் கூறிய ஆயின், சபா பயணத்தின்போது பணம் குறைவாக இருந்த நிலையில், மூவரும் சேர்ந்து ஒரே ஒரு பானத்தை வாங்கிப் பகிர்ந்து குடித்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

“வாழ்க்கையில் சவாலான காலங்களிலும், இன்று மகிழ்ச்சியாக இருக்கும் காலங்களிலும், நாங்கள் ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருந்திருக்கிறோம். சவால்களிலிருந்து இன்றைய நிலை வரை என் இரு தோழிகளும் என் பக்கத்தில் இருந்துள்ளனர்,” என்று ஆயின் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

மேலும், இந்த 12 ஆண்டுகால நட்பின் ஆழத்தை வினிஷா முழுமையாக உணர்ந்த தருணம் அவரது திருமண நாளாகும். வாழ்க்கையின் முக்கியமான அந்த நாளில் ஆயினும் அமண்டாவும் மணப்பெண் தோழிகளாக அருகில் நின்றனர். இருவரும் சேலை அணிந்திருந்த நிலையில், மலாய் தோழியும் கிறிஸ்தவ தோழியும் இந்திய மணப்பெண்ணின் அருகில் நின்ற அந்தக் காட்சி, பல ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் கல்விக் கழக வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்திருந்த மூன்று மாணவிகளை மீண்டும் நினைவுபடுத்தியது. “அன்று நாங்கள் மீண்டும் மூவராக இருந்தோம். ஆசிரியர்களாக உருவாகிக்கொண்டிருந்த காலத்திலும் அவர்கள் என்னுடன் இருந்தார்கள். இன்று என் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளிலும் அவர்கள் என்னுடன் இருந்தார்கள்,” என அவர் கூறினார்.

வினிஷாவைப் பொறுத்தவரை, ஆயின் மற்றும் அமண்டாவுடனான இந்த நட்பு தனிப்பட்ட வாழ்க்கையின் அழகான நினைவாக மட்டுமல்லாமல், மலேசியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஓர் எளிய உதாரணமாகவும் உள்ளது. வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்த மூவரும், அந்த வேறுபாடுகளை தங்களது நட்புக்கு ஒருபோதும் தடையாக மாற்றவில்லை. “நாங்கள் வெவ்வேறு இனங்களையும் கலாசாரங்களையும் சேர்ந்தவர்கள். ஆனால் எங்களுடைய வேறுபாடுகள் எங்களுடைய நட்பை ஒருபோதும் தீர்மானிக்கவில்லை. நாங்கள் நண்பர்கள் மட்டுமே,” என்றார் அவர்.

இந்த மலேசியா தினத்தை முன்னிட்டு, ஆயின், அமண்டா, வினிஷாவின் 12 ஆண்டுகால நட்பு ஒரு எளிய உண்மையை நினைவூட்டுகிறது. மலேசியாவின் அழகு வெவ்வேறு இனங்களும் கலாசாரங்களும் ஒன்றாக வாழ்வதில் மட்டுமல்ல; அந்த வேறுபாடுகளைக் கடந்து ஒருவரை ஒருவர் மனிதர்களாகவும் நண்பர்களாகவும் ஏற்றுக்கொள்வதில்தான் உள்ளது. மூன்று வெவ்வேறு அடையாளங்கள், மூன்று வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகள், ஆனால் 12 ஆண்டுகளாக மாறாத ஒரு நட்பு இதுவே அவர்களுக்கு மலேசியா.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.