கூலிம், செப்.15: கூலிம், தாமான் திராமில் கணவரால் 13 முறை கத்தியால் குத்தப்பட்ட 39 வயது பெண் உயிரிழந்தார்.
வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரின்டெண்டன் ஷம்சுல் சின்ரிங் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் எஸ். சிலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தினர் அவரை கூலிம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இரவு 9.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, 43 வயதுடைய வேலையில்லாத அந்தப் பெண்ணின் கணவர், நேற்று இரவு 8.40 மணியளவில் லூனாஸ் காவல் நிலையத்திற்குச் சென்று, தாம் மனைவியைக் கத்தியால் குத்தியதாகத் தெரிவித்ததாக ஷம்சுல் கூறினார்.
மேலும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மடிக்கக்கூடிய கத்தி ஒன்றையும் அந்நபர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
பொறாமையால் ஏற்பட்டதாக நம்பப்படும் வாக்குவாதமே இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஷம்சுல் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302இன் கீழ் கொலைக் குற்றமாக விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஷம்சுல் குறிப்பிட்டார்.







