பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20 - சிலாங்கூர் மாநிலத்தில் 'NutriSel' மற்றும் 'RMT' ஆகிய உணவு உதவித் திட்டங்களின் கூட்டு முயற்சியால், 1 லட்சத்து 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 10 லட்சம் மாணவர்களில் அவ்வெண்ணிக்கை 15 விழுக்காடாகும்.
இதற்கு முன்பு RMT திட்டம் மட்டுமே இருந்தபோது சுமார் 55,000 மாணவர்கள் மட்டுமே பயன்பெற்றனர். அதாவது B40 பிரிவைச் சேர்ந்த 10 விழுக்காட்டுக்கும் குறைவான மாணவர்களுக்கே இலவச உணவு கிடைத்தது.
தற்போதைய NutriSel திட்ட அறிமுகத்தால், உணவு உதவி தேவைப்படும் இன்னும் பல ஏழை மாணவர்களுக்கு இந்த ஆதரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.

தற்போது மூன்றாவது வாரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த NutriSel திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள 932 பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 6,000 மாணவர்களை நேரடியாகச் சென்றடைகிறது.
இதன் மூலம் மாணவர்களுக்கு வாரத்திற்கு இரு முறை இலவச உணவு வழங்கப்படுகிறது. குறிப்பாகக் காலை நேர மாணவர்களுக்குச் சோறு, கறி, பழங்கள், காய்கறிகள் மற்றும் பானங்கள் அடங்கிய முழுமையான சத்தான உணவு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் தரத்தை உறுதி செய்வதற்காக, இதில் பங்கேற்கும் 90 விழுக்காடு பள்ளிகள் உணவின் தரம் மற்றும் அளவு குறித்த விரிவான அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளன.
உணவு எப்போதும் புதியதாகவும், பாதுகாப்பாகவும், விநியோகத் தாமதங்கள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய, வெளி முகவர்களிடம் (Caterers) கொடுக்கப்படாமல், அந்தந்தப் பள்ளிகளின் உணவகங்கள் மூலமாகவே நேரடியாகத் தயாரிக்கப்படுகிறது.
பள்ளி நிர்வாகங்களும் கல்வித் துறையும் உணவகங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதன் மூலம் இத்திட்டத்தின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
மாநில அளவில், மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு, பள்ளிகளிடமிருந்து நேரடியாகப் பெறப்படும் தினசரி கள அறிக்கைகளை ஆய்வு செய்து இத்திட்டத்தைக் கூர்ந்து கண்காணிக்கிறது.
இந்தத் தொடர்ச்சியான கண்காணிப்பு முறை, அரசாங்கம் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை உடனடியாக மதிப்பீடு செய்யவும், விநியோக முறைகளை மேம்படுத்தவும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

மாநில அரசு இத்திட்டத்தின் முதல் மூன்று மாத காலத்திற்கு 1 கோடியே 40 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இதற்குக் கிடைக்கும் வரவேற்பு மற்றும் தேவையின் அடிப்படையில் இத்திட்டத்தை நீட்டிப்பது குறித்து அதிகாரிகள் பின்னர் பரிசீலிப்பார்கள்.






