கோலாலம்பூர், செப் 9 - நிறுவனமொன்றின் தலைவர் பொறுப்பை வகிக்கவும் , 193.5 மில்லியன் ரிங்கிட் முதலீட்டை அங்கீகரிக்கவும் தமது பதவியைப் பயன்படுத்தியதாக, தாபுங் ஹஜி வாரியத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ அசீஸ் அப்துல் ரஹிம் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படது.
நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட நிலையில், 59 வயதான அந்த முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அசீஸ் , குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார்.
ஓட்டுநருடன் சேர்த்து பி.எம்.டபிள்யு 7 சீரியஸ் ( BMW 7 Series) காரொன்றும், சலுகைகளுடன் கூடிய வருவாயான ஆண்டுக்கு 6 லட்சத்து 90,000 ரிங்கிட் தொகையில் புத்ராஜெயா பெர்டானா நிறுவனத்தின் தலைவர் பதவியைப் பெற அப்துல் அசீஸ் தமது தாபுங் ஹாஜியின் தலைவர் பதவியைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நோக்கத்திற்காக, புத்ராஜெயா பெர்டானா நிறுவனத்தில் தாபுங் ஹஜியின் பிரதிநிதியாக தமது பெயரைப் பரிந்துரைக்குமாறு, அவர் அப்போது தாபுங் ஹாஜியின் தலைமை செயல்முறை அதிகாரியாக இருந்த தான் ஸ்ரீ இஸ்மீ இஸ்மாயிலை பணித்ததாக குற்றப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், புத்ராஜெயா பெர்டானா நிறுவனத்தில் 193.5 மில்லியன் ரிங்கிட் முதலீட்டை அனுமதிக்குமாறு அப்போதைய தாபுங் ஹாஜி வாரிய உறுப்பினர்களை அவர் நம்பிக்கை மூட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அவருக்கு எதிராக, 2009 மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் செக்க்ஷன் 23 (1) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
இக்குற்றத்திற்கு அதே சட்டத்தின் 24 ( 1) பிரிவின் கீழும் தண்டனை விதிக்க முடியும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை , கையூட்டாக பெற்ற மதிப்பில் ஐந்து மடங்கு கூடுதல் அபராதம், அல்லது எது உயர்வான மதிப்பு என்ற அடிப்படையில் 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்க முடியும்.
அப்துல் அசீஸ் 4 லட்சத்து 50,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், இரு உள்நாட்டு நபர் உத்தரவாதத்துடனும் விடுவிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
ஆவண ஒப்படைப்புக்காக இந்த வழக்கு நவம்பர் 11 -ஆம் தேதி செவிமடுக்கப்படும்.






