தாபுங் ஹாஜியின் 14 பிரச்சனைக்குரிய முதலீடுகளில் 7 முதலீடுகள் முற்றிலும் நட்டம்

11 ஆகஸ்ட் 2026, 4:13 PM
தாபுங் ஹாஜியின் 14 பிரச்சனைக்குரிய முதலீடுகளில் 7 முதலீடுகள் முற்றிலும் நட்டம்
தாபுங் ஹாஜியின் 14 பிரச்சனைக்குரிய முதலீடுகளில் 7 முதலீடுகள் முற்றிலும் நட்டம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - தாபுங் ஹாஜியின் நிதி நிர்வாகம் குறித்து RCI-அரச விசாரணை ஆணையம் கண்டறிந்த 14 பிரச்சனைக்குரிய முதலீடுகளில் ஏழு முதலீடுகள் முழு நட்டத்தைப் பதிவு செய்தன என இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அஜிசான் மக்களவையில் தெரிவித்தார்.

இந்த RCI விசாரணை, 2014 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்துக்கான ஹாஜ் யாத்ரீகர்களின் நிதி நிர்வாகத்தை ஆய்வு செய்தது.

அதில் 14 முதலீடுகளால் கிட்டத்தட்ட 13 பில்லியன் ரிங்கிட் நட்டம் ஏற்பட்டதாக அமீர் கூறினார். 2018-இல் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் 10.2 பில்லியன் ரிங்கிட் நட்டத்தை ஏற்றுக்கொண்டது;

அதே வேளையில் தாபுங் ஹாஜி நிறுவனம் 2018 முதல் 2025- ஆம் ஆண்டு வரை மேலும் 2.6 பில்லியன் ரிங்கிட் நட்டத்தை தன் வசம் ஏற்றுக்கொண்டது.

"14 முதலீடுகளில் ஏழு முதலீடுகள் 100% நட்டத்தைச் சந்தித்தன. ஒரு பகுதி அல்ல, முழுமையாகவே நட்டம்," என்று அவர் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் RCI அறிக்கை மீதான விவாதத்தை நிறைவு செய்து பேசும்போது அவ்வாறு கூறினார்.

இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான்; படம் - பெர்னாமா

இந்த நட்டங்கள் சந்தை நிலவரங்களால் மட்டுமே ஏற்பட்டவை அல்ல ;

போதுமான உரிய ஆய்வு செயல்முறைகள் இல்லாதது, பலவீனமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தாபுங் ஹாஜி அதிகாரிகளின் எச்சரிக்கைகளையும் மீறி சில பரிவர்த்தனைகள் தொடரப்பட்டதே இதற்குக் காரணம் என அமீர் கூறினார்.

மிகப்பெரிய நட்டம், சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட அல்-ரவ்தா சொத்துடமை மேம்பாட்டுத் திட்ட நிர்வாக நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீட்டின் மூலம் ஏற்பட்டதாகும்.

2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தில் அல்-ரவ்தாவின் முதலீடு உள்ளடங்கியுள்ளது என்று அமீர் கூறினார்.

மலேசிய ஹாஜ் யாத்ரீகர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக மக்கா மற்றும் மதினாவில் உள்ள நான்கு ஹோட்டல்களைக் குத்தகைக்கு எடுக்க, தாபுங் ஹாஜி நிறுவனம் இடைத்தரகர்களுக்கு 1.4 பில்லியன் சவூதி ரியால் தொகையைச்செலுத்தியுள்ளது.

அந்த நிறுவனம் இந்த நான்கு ஹோட்டல்களையும் இயக்கி, தாபுங் ஹாஜி நிறுவனத்திற்கு 2.49 பில்லியன் சவூதி ரியால் தொகையை வாடகையாகச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தொகை செலுத்தப்படவில்லை.

மேலும், இந்த மிகப்பெரிய முதலீட்டிற்கு தனிநபர் உறுதிமொழிப் பத்திரம் மட்டுமே உத்தரவாதமாக வைக்கப்பட்டு இருந்தது என்று அவர் கூறினார்.

2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து அல்-ரவ்தா நிறுவனம் வாடகைத் தொகையைச் செலுத்தத் தவறியது. இது இறுதியாக 2024 -ஆம் ஆண்டில் 1 பில்லியன் ரிங்கிட் முழுமையான மதிப்பு குறைப்பு நட்டத்தை தாபுங் ஹாஜி அங்கீகரிக்க வழிவகுத்தது என அமீர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.