புத்ராஜெயா, ஆகஸ்ட் 27 : தபூங் ஹாஜி வாரியத்தின் முன்னாள் தலைவர், கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆகிய இருவர், அவ்வாரியம் தொடர்பான அரச விசாரணை ஆணைய (RCI) அறிக்கைத் தொடர்பில் தடுப்புக் காவல் விசாரணைக்காக, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
60 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும், காலை 9.31 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆரஞ்சு நிற தடுப்புக் காவல் சட்டையை அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தனர்.
அவர்களுடன், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஏற்கனவே தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தபூங் ஹாஜியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரும் காணப்பட்டார்.
விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று மாலை 4 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வந்திருந்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமன் உறுதிப்படுத்தினார்.
தபூங் ஹாஜி நிறுவனத்தின் அரச விசாரணை ஆணைய அறிக்கை கடந்த ஜூலை 29-ஆம் தேதி பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் தபூங் ஹாஜியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் உள்ள பல்வேறு குறைபாடுகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், தடயவியல் தணிக்கை தேவைப்படும் சிக்கலான முதலீடுகளும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்திருப்பதையும், தகவல்கள் மறைக்கப்பட்டிருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.






