ஷா ஆலாம், செப். 7: கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு (KKDW), அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை ஒருபோதும் மீறி செலவு செய்யாது என அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அமைச்சின் செலவினங்கள் அனைத்தும் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஒதுக்கீடு அல்லது அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தொகையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாக துணைப் பிரதமரான அவர் கூறினார்.
KKDW-இன் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவகாரம், அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் ஒப்பந்ததாரர்களுக்கான கொடுப்பனவுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அஹ்மாட் சாஹிட் முன்னதாக தெரிவித்ததைத் தொடர்ந்து எழுந்தது.
அரசாங்கத் திட்டங்களை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களை இந்தக் கொடுப்பனவு தாமதங்கள் பாதித்துள்ளதாகக் கூறிய துணைப் பிரதமர், இத்தகைய தாமதங்கள் தொடர்ந்து நீடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இதனிடையே, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி கருவூல தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஜோஹான் மஹ்மூட் மெரிக்கான், கிராமப்புற சாலைத் திட்டங்களுக்காக KKDW-க்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அத்திட்டங்களுக்கான முழு நிதி ஒதுக்கீடும் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனால், கிராமப்புற சாலைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஏற்பட்டுள்ள விளக்கங்களுக்கிடையே, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வரம்புக்குள் மட்டுமே அமைச்சின் செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாக அஹ்மாட் சாஹிட் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.






