கோலாலம்பூர், ஜன 5- 16ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும் வரை அம்னோ தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெறும் என்று துணைப்பிரதமரும் அம்னோ தேசிய தலைவருமான டத்தோஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.
நடப்பு அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவினை வாபஸ் பெற்று எதிர்கட்சி தரப்புக்கு ஆதரவு அளிக்க அம்னோ இளைஞர் பிரிவு அழைப்பு விடுத்த நிலையில் டத்தோஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி இவ்வாறு கருத்துரைத்தார்.
மடாணி அரசாங்கத்தில் அம்னோ கூட்டணி கட்சியாக இருக்கும் அதனை முறிக்கும் எண்ணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
15ஆவது நாடாளுமன்ற தவணை முடியும் வரை அம்னோ தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கவே விரும்புகிறது என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ இளைஞர் பிரிவு மாநாட்டில் அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று அதன் தலைவர் டாக்டர் அக்மால் சாலே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


