ஜகார்த்தா,செப்.6 - இந்தோனேசியாவின் அனக் கிராகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பின் காரணமாக, அந்நாட்டில் பள்ளி நடவடிக்கைகளும் மீன்பிடி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை ஜகார்த்தாவின் முக்கிய விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
எரிமலை சாம்பல் காரணமாக காலை 9:30 மணி வரை விமான செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக சுகர்ணோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தது.
முன்னதாக காலை 5:30 மணி வரை திட்டமிடப்பட்டிருந்த இந்த விமானப் பயண நிறுத்தம், பல அனைத்துலக விமானங்கள் உட்பட 209 விமான சேவைகளைப் பாதித்துள்ளது என்று இந்தோனேசியாவின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
எரிமலையின் ஜாவா பகுதியில் 6,000 மீட்டர் உயரத்திலும், சுமத்ரா பகுதி மற்றும் ஜாவாவின் பாந்தென் (Banten) மாகாணத்தின் சில பகுதிகளில் 15,000 மீட்டர் வரையிலும் எரிமலை சாம்பல் புகை மண்டலம் கண்டறியப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு நிறுவனமான BMKG தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் அனக் கிராகடாவ் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சுனாமி, ஜாவா மற்றும் சுமத்ராவில் நூற்றுக்கணக்கான மக்களைப் பலி கொண்டதோடு மேலும் நூற்றுக்கணக்கானோரை காயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கிராகடாவின் குழந்தை என்று பொருள்படும் அனக் கிராகடாவ், ஒரு காலத்தில் கிராகடோவா (Krakatoa) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு நடுவே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உருவானதாகும்.





