தங்கேராங், செப் 8 - அனக் கிரக்கடாவ் எரிமலையின் சாம்பல் மூட்டம் விலகியதை அடுத்து, இந்தோனேசியா தனது முக்கிய விமான நிலையங்களை மீண்டும் திறந்துள்ளது.
இருப்பினும், செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட புதிய வெடிப்புகள் மேலும் விமானச் சேவைகளில் இடை யூறுகளை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரித்துள்ளன.
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கிரக்கடாவ் (Anak Krakatau) எரிமலையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியேறத் தொடங்கிய சாம்பல், ஜகார்த்தா மற்றும் அதன் சுற்றியுள்ள சில பகுதிகளை முழுமையாக மூடியது.
பாதுகாப்பு காரணங்களுக்காக எட்டு விமான நிலையங்கள் மூட அது வழிவகுத்தது. அதனால் 340,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, இந்த விமானப் பயணத் தாமதங்கள் விமான நிறுவனங்களின் நிதி நிலையில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ரத்து செய்யப்பட்ட விமானங்களால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய தேசிய விமான நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பயு சுதாந்தோ (Bayu Sutanto)தெரிவித்தார்.
விமானங்கள் தடம் மாற்றப்படுவதால் ஏற்படும் கூடுதல் எரிபொருள் செலவுகள், விமானங்களை நிறுத்துவதற்கான கட்டணங்கள் அல்லது விமான ஊழியர்கள் சார்ந்த செலவுகள் போன்ற பல்வேறு கூடுதல் செலவுகளை விமான நிறுவனங்கள் ஏற்க வேண்டியிருக்கும் என்று பயு தெரிவித்தார்.
அத்துடன், சோகர்ணோ-ஹட்டா விமான நிலையத்தில் ஒரு விமானத்திற்கு ஏற்படும் தாமதம், அதே விமானத்தைப் பயன்படுத்தும் அடுத்த மூன்று அல்லது நான்கு விமானச் சேவைகளைப் பாதிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
விமானங்கள் தடம் மாற்றப்படுவதால் விமான நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 19 பில்லியன் ருபியா வரை வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என்றாரவர்.




