ஷா ஆலாம், ஜூலை 26 : கிள்ளானில் உள்ள உணவு மற்றும் பொருள் விநியோகப் பணியாளர்கள் (p-hailing), ஆர்டர்களுக்காகக் காத்திருக்கும்போது மிகவும் வசதியாக ஓய்வெடுப்பதற்காக, கிள்ளான் அரச மாநகர் மன்றம் (MBDK) ஜாலான் தெலுக் புலாயில் 'MBDK@Teduh' என்ற பிரத்யேக ஓய்விடத்தை உருவாக்கவுள்ளது.
சுமார் 1 லட்சத்து 50,000 ரிங்கிட் மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு கிள்ளான் மாநகர் மன்றம் தனது சொந்த நிதியிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கியுள்ளது.
எஞ்சிய 30 ஆயிரம் ரிங்கிட் மாநில அரசின் மானியம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கிள்ளான் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ அப்துல் ஹமித் ஹுசைன் தெரிவித்தார்.
இந்த ஓய்விடத்தில் கூரையுடன் கூடிய காத்திருப்புப் பகுதி, கைபேசி மின்னேற்றம் செய்யும் வசதி உள்ளிட பிற வசதிகளும் சேர்க்கப்படும்.
இதனால் பணியாளர்கள் தங்களின் அடுத்தப் பணியைத் தொடங்குவதற்கு முன் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியும் என்று அவர் கூறினார்.
MBDK@Teduh திட்டத்தின் கட்டுமானம், கிக் பொருளாதார (gig economy) தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உள்ளூர் அதிகாரத்துவ தரப்புகளின் கடப்பாட்டினைக் காட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜாலான் தெலுக் புலாய் ஒரு பரபரப்பான வணிகப் பகுதியாகும்.
இது விநியோகப் பணியாளர்கள் உணவகங்களில் இருந்து ஆர்டர்களைப் பெறுவதற்காக அடிக்கடி கூடும் முக்கிய இடமாக இருப்பதால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அப்துல் ஹமித் விளக்கினார்.
பணியாளர்கள் சாலையோரங்களிலோ அல்லது பாதுகாப்பற்ற இடங்களிலோ நிறுத்த வேண்டிய அவசியமில்லாமல், ஓய்வெடுக்க தகுந்த இடம் கிடைப்பதால், இந்தத் திட்டம் சாலைப் பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




