சுபாங் ஜெயா, ஜன 21: பி-பங்கிலான் ஓட்டுநர்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் ஓய்வெடுக்க TEDUH திட்டத்தை சுபாங் ஜெயா மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் சிலாங்கூர் மாநில அரசின் ஒத்துழைப்புடன், சிலாங்கூர் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை (STI) நிலைக்குழு மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாநகராட்சி முகநூலில் தெரிவித்தது.
“இந்த இடம் பசார் மோடேன் SS15, சுபாங் ஜெயா முன்னிலையில் அமைந்துள்ளது. இதில் பாதுகாப்பு அமைப்பு, மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடங்கள், கைப்பேசி சார்ஜிங் இடங்கள், வசதியான நாற்காலிகள், விசிறிகள் மற்றும் LED விளக்குகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
"சிசிடிவி கேமராக்கள் மற்றும் மறுசுழற்சி தொட்டிகளும் உள்ளன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி நிலையான தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வலுப்படுத்துவதற்கும், சமூகத்தின் நல்வாழ்வுக்காகவும் மற்றும் பொது வசதிகளை மேம்படுத்துவதற்கும் சுபாங் ஜெயா மாநகராட்சியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
TEDUH திட்டம் முதன்முதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது பொருட்களை டெலிவரி செய்த பிறகு அல்லது ஆர்டர்களுக்காகக் காத்திருக்கும்போது பி-பங்கிலான் ஓட்டுநர்களுக்குப் பாதுகாப்பான ஓய்வு பகுதியாக அமைந்துள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் ஐந்து நகராண்மை கழகங்கள் மற்றும் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டது. இந்நடவடிக்கை, சம்பந்தப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என புதுமை கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி நகா தெரிவித்தார்.


