ஷா ஆலாம், செப் 1 - புகை மூட்டம் மோசமடைந்துள்ளதை அடுத்து, நாட்டின் 3 மாநிலங்களில் உள்ள, 13 பகுதிகளில் செயற்கை மழைப் பொழிவுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெயில் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளிலும், இம்மாதம் 3-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரை கட்டம் கட்டமாக அந்த செயற்கை மழைப் பொழிவு மேற்கொள்ளப்படுமென, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
சரவாக்கில், பத்தாங் அய் நீர் அணைக்கட்டு, பகுன், முரும், பெஙோ, கெருகு, அஷாகிரின், சிகா, மாத்தாங் ஆகிய பகுதிகளில் செயற்கை மழைப் பொழிவு மேற்கொள்ளப்படும்.
கெடாவில், பெடு அணைக்கட்டு, முடா, அஹ்னிங், பெரிஸ் மற்றும் பெர்லிஸில் தீமா தாசோ நீர் அணைக்கட்டிலும், நட்மா -தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு அந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.
நட்மா ( NADMA ) மலேசிய வானிலை ஆய்வுத் துறை மற்றும் இராணுவ வான்படை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு செயற்கை மழையைப் பொழிவிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.
களிமந்தானில் பரவலாக ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயால், சரவாக்கில் நான்கில் மூன்று பகுதி மோசமான புகை மூட்டப் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளது.
அதையடுத்து சரவாக் மாநிலத்திற்கு உதவ வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக , அஹ்மாட் சாஹிடி கூறினார்.






