கோலாலம்பூர், டிச 19 — வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனமான நட்மா, தொடர்புடைய நிறுவனங்களுடன் உடனடி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைத்தின் குறுஞ்செய்தி சேவை மூலம் அவசர அறிவிப்புகள், சமூக நலத்துறையின் (JKM) நலன்புரி உதவிகள் ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
மேலும், நீர் மட்டங்களைக் கட்டுப்படுத்தவும் வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் அவசரகால குழாய்களை நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (DID) இயக்கும் பிற நடவடிக்கைகளும் இதில் உள்ளடங்கும் என பிரதமர் தெரிவித்தார்.
“வெள்ளம் பல மாநிலங்களைத் தாக்கியதாலும் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலையாலும் நான் மிகவும் வருத்ததில் உள்ளேன்” என்றார் பிரதமர். இந்தப் பேரிடர் விரைவில் தணிந்து, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று தான் பிராத்திப்பதாக அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக அறிவுறுத்தப்படும் போது தற்காலிக நிவாரண மையங்களுக்கு விரைவாக இடம்பெயரவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யும் முன்னணி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அன்வார் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இரவு 8 மணி நிலவரப்படி தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் (NDCC) சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் சிலாங்கூர், பகாங், திரங்கானு, கிளந்தான்,ஜோகூர் மற்றும் சரவாக் ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்கள் ஆகும். இதில் பாதிக்கப்பட்ட 13,419 பேர்கள் 95 மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


