புத்ராஜெயா, ஆகஸ்ட் 31 - சுதந்திரத் தின அணிவகுப்புகளின் போது, மக்களின் கவனத்தை ஈர்ப்பவைகளில் ஒன்று, வர்ணனையாளர்களின் குரல்.
சில நேரங்களில் வர்ணனையாளர்களைப் பார்க்க முடியாவிட்டாலும், அணிவகுப்பு நெடுகே ஒலிக்கும் அவர்களது குரல், வருகையாளர்களை நிகழ்ச்சி குறித்து முழுமையாகப் புரிந்துக் கொள்ள உதவுகிறது.
அவ்வகையில், இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசியத் தினக் கொண்டாட்டத்தில், பலரது கவனத்தை ஈர்த்திருந்த குரல்களில் ஒன்று மேஜர் டினேஷ் நிக்கோலஸ் ரெனே- வுக்குச் சொந்தமானதாகும்.
போர் விமானங்கள் புத்ராஜெயா வானின் உயரே சாகசத்தில் ஈடுபட , அதை கீழுருந்து பார்ப்பவர்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் தகவல்களை வழங்கி விறுவிறுப்பான வர்ணனையை வழங்கியிருந்தார் மேஜர் டினேஷ்.
2015- ஆம் ஆண்டு முதல் அரச மலேசிய ஆகாயப்படையில் சேவையாற்றி வரும் மேஜர் டினேஷ் , 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற லீமா கண்காட்சியில் வர்ணனையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவே, வர்ணனைத் துறையில் அவரைக் கால் பதிக்க வைத்தது.
மாமன்னர், பிரதமர் என நாட்டின் முக்கியத் தலைவர்களும் பிரமுகர்களும் கலந்துக் கொள்ளும் சுதந்திரத் தினம் போன்ற மாபெரும் நிகழ்ச்சிகளில், வர்ணனை செய்யும் போது, நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது முக்கிய சவால்களில் ஒன்றாகுமென மேஜர் டினேஷ் குறிப்பிட்டார்.
ஒரு நிகழ்ச்சி சுவாரஸ்யத்துடன் விறுவிறுப்பாக அமைய வர்ணனை மிக முக்கியமாகும். அந்த உணர்வை என்னுள் உள்வாங்கிக் கொண்டு , வருகையாளர்களுக்கு திருப்பி கொடுக்க ஒவ்வொரு முறையும் முயற்சிப்பதாகக் கூறுகிறார் மேஜர் டினேஷ் .





