புத்ராஜெயா, ஆகஸ்ட் 31: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக மலேசியாவின் SMART எனப்படும் தேடி-மீட்கும் சிறப்பு பேரிடர் குழுவினர் அந்நாட்டிற்குச் செல்ல தயாராக உள்ளனர்.
தற்போது அந்நாட்டு அரசாங்கத்தின் பதிலுக்காக மலேசியா காத்திருக்கிறது என்று SMART குழுத் தலைவர் அப்துல் மனாஃப் சே ஈசா தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் SMART குழுவை நேபாளத்திற்கு அனுப்புவதாக அறிவித்ததை அடுத்து, குழு அனைத்து வகையிலும் முழுமையாகத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மலேசியர்களைக் கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பாக மலேசியாவுக்குத் திரும்ப அழைத்து வருவதற்கும் SMART குழு உதவும் என்று அன்வார் முன்னர் தெரிவித்திருந்தார்.
இதனுடன், பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு உதவுவதற்காக மலேசியா 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதோடு பேரிடருக்குப் பிந்தைய மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
நேபாள அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்தவுடன், பேரிடர் மீட்புப் பணிகளுக்காக SMART குழு உடனடியாக அங்கு அனுப்பப்படுவதற்குத் தயாராக உள்ளது.







