பெட்டாலிங் ஜெயா: இன்று, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) பிற்பகல் 3 மணி வரை எட்டு மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, கன மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் வடப் பகுதியில், இந்த வானிலை எச்சரிக்கை பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலங்கள் முழுவதையும் உள்ளடக்கியுள்ளது.
கெடாவில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் லங்காவி, குபாங் பாசு, பாடாங் தெராப், போகோக் செனா, கோத்தா செடார், பெண்டாங், யான் மற்றும் குவாலா மூடா ஆகியவை அடங்கும்.
நாட்டின் மத்தியப் பகுதியில் , சிலாங்கூரில் குறிப்பாக சபாக் பெர்னாம், உலு சிலாங்கூர், குவாலா லங்காட், சிப்பாங் மற்றும் உலு லங்காட் ஆகிய பகுதிகளில் வானிலை கடுமையாக இருக்குமெனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெற்கில், இந்த எச்சரிக்கை நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்கள் முழுவதையும், அத்துடன் ஜொகூரில் தங்காங்க் மற்றும் மூவார் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
பஹாங்கில், பெரா மற்றும் பெந்தோங் ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மலேசியாவில், இந்த எச்சரிக்கை சரவாக்கின் சில பகுதிகளான பிந்துலு, சிபுவில் உள்ள செலாங்காவ், மற்றும் மிரியில் உள்ள சுபிஸ், மிரி, பெலுரு மற்றும் மாருதி ஆகிய இடங்களை உள்ளடக்கியுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு தீவிரத்துடன், இடியுடன் கூடிய மழை உடனடியாக அல்லது ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும்தற்கான அறிகுறிகள் தென்படும் போது MetMalaysia இந்த எச்சரிக்கைகளை வெளியிடுகிறது.
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும். இது ஒரு முறை வெளியிடப்பட்டால் ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும்.
இந்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.







