பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 23 - தணிக்கை செய்யப்பட்ட இணையச் சேவையை, பொதுவிடத் தளங்களுக்கும் , தனியார் உயர் கல்வி கூடங்களுக்கும் விரிவுப்படுத்த, மலேசியப் பல்லூடக ஆணையம், சிலாங்கூர் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துள்ளது.
தீமையை ஏற்படுத்தக் கூடிய உள்ளடக்கங்களை மாநில பள்ளிவாசல்களில் தணிக்கை செய்திருக்கும் முன்னோடித் திட்டத்தின் வெற்றியை அடுத்து, மேலும் அந்த தணிக்கை சேவையை விரிவுப்படுத்தவிருப்பதாக, இஸ்லாம், புத்தாக்கம் மீதான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் ஃபாஹ்மி ஙா தெரிவித்தார்.
தொழுகை மற்றும் கற்றல் நேரத்தின் போது இணைய வசதி தவறாகப் பயன்படுவதைத் தவிர்க்க உள்ளடக்க தணிக்கை அவசியமென அவர் கூறினார்.
" பள்ளிவாசலில் தொழுகையின் போது சிறுவர்கள் இணைய வீடியோ விளையாட்டை விளையாடுவதைத் தடுக்க முடியுமென்றால், கற்றல் நேரத்தின் போதும், பொதுவிடத் தளங்களிலும் அந்த இணையக் கட்டுப்பாட்டினை விதிக்க முடியுமென நம்புகிறேன்" என ஃபாஹ்மி கூறினார்.
இங்குள்ள கம்புங் லிண்டுஙான் கிராமத்தில் 'பெட்டாலிங் ஜெயா பாதுகாப்பு இணையச் சமூக விழாவைத்' தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.







