2026 ஆசியான் கிண்ண முதல் அரையிறுதி: மலேசியா 0-2 என வியட்நாமிடம் தோல்வி

17 ஆகஸ்ட் 2026, 2:03 AM
2026 ஆசியான்  கிண்ண முதல் அரையிறுதி: மலேசியா 0-2 என வியட்நாமிடம் தோல்வி

கோலாலம்பூர், 16 ஆகஸ்ட் : 2026 ஆசியான் கிண்ண முதல் அரையிறுதி ஆட்டத்தில் வியட்நாமுக்கு எதிராக சாதகமான முடிவைப் பெறும் ஹரிமாவ் மலாயாவின் (மலேசிய அணி) எண்ணம் நிறைவேறவில்லை.

செராஸ், கோலாலம்பூர் காற்பந்து அரங்கில் நேற்றிரவு நடந்த போட்டியில் மலேசியா 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

போட்டியின் முற்பாதி ஆட்டம் இரு அணிகளுக்கும் இடையே சமபலத்துடன் நகர்ந்தது. முதல் 30 நிமிடங்களில் இரு அணிகளாலும் எந்தவோர் ஆபத்தான கோல் வாய்ப்பையும் உருவாக்க முடியவில்லை.

இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் டான் செங் ஹோ தலைமையிலான மலேசிய அணி முதலில் நெருக்கடியை ஏற்படுத்தியது.

போட்டியின் 35-வது நிமிடத்தில், வியட்நாம் கோல்காவலர் பேட்ரிக் லே ஜியாங், முகமது ஃபாரிஸ் டேனிஷ் அஸ்ருலின், 'கிராஸ்' பந்தைத் தடுத்தார்.

அப்போது ரீபவுண்ட் ஆகி வந்த பந்தை மலேசியாவின் நடுகள ஆட்டக்காரர் டேரில் ஷாம் கே. ஜார்ஜ் உதைக்க முயன்றார். ஆனால் அந்தப் பந்து கோல் கம்பத்திற்கு மேலே பறந்தது.

முற்பாதியின் இறுதிக்கட்டத்தில் வியட்நாம் தனது அழுத்தத்தை அதிகரித்தது. அந்நாட்டின் முன்கள ஆட்டக்காரர் நுயென் சுவான் சோனின் அக்ரோபாட்டிக் கிக் (akrobatic kick) வாயிலாக அடித்த பந்து கோல் கம்பத்தின் இடதுபுறமாக வெளியேறியது.

அதன் பிறகு, விங்கர் நுயென் தின் பாக் பெனால்டி பாக்ஸிற்கு வெளியிலிருந்து அடித்த பந்தை மலேசிய கோல் காவலர் முஹம்மட் அஸ்ரி அப் கானி எளிதாகப் பிடித்தார்.

இறுதியாக, முற்பாதியின் கூடுதல் நேரத்தின் ஐந்தாவது நிமிடத்தில் 'கோல்டன் டிராகன்' (வியட்நாம்) அணி முதல் கோலை அடித்தது.

விங்கர் துராங் தியென் அன் கொடுத்த பந்தை, சுவான் சோன் ‘டைவிங் ஹெடர்’ (diving header) மூலம் கோலாக மாற்றினார். வியட்நாம் 1-0 என முன்னிலையுடன் இடைவேளைக்குச் சென்றது.

பிற்பாதி ஆட்டம் தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள், கிம் சாங் சிக் தலைமையிலான வியட்நாம் அணி தனது முன்னிலையை இரட்டிப்பாக்க முற்பட்டது. ஆனால் நுயென் தாய் லோக் அடித்த பந்தை முகமது அஸ்ரி தடுத்தார்.

தொடர்ந்து சுவான் சோன் அடித்த பந்தை மலேசியாவின் மாற்று ஆட்டக்காரர் அகமது அய்ஸர் ஹாதி முகமது ஷாப்ரி தடுத்து நிறுத்தினார்.

போட்டியின் 61-வது நிமிடத்தில், மலேசிய ஆட்டக்காரர் முகமது சுமாரேவிடம் பெனால்டி பாக்ஸிற்கு வெளியே கடுமையாக நடந்து கொண்டதற்காக பேட்ரிக்கிற்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

இதனால் வியட்நாம் அணி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், வீடியோ உதவி நடுவர் (VAR) பரிசீலனைக்குப் பிறகு நடுவர் லுட்ஃபுல்லின் ருஸ்டம் அந்த முடிவை ரத்து செய்தார்.

77-வது நிமிடத்தில், தியென் அன் வலது பக்கத்திலிருந்து கொடுத்த பந்தை வியட்நாம் தற்காப்பு ஆட்டக்காரர் பாம் சுவான் மான் தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் அந்த முயற்சியை முஹம்மட் அஸ்ரி வெற்றிகரமாக தடுத்தார்.

86-வது நிமிடத்தில் மலேசியாவிற்குப் பின்னடைவு ஏற்பட்டது. நுயென் குவாங் ஹாய் கொடுத்த பந்தைத் தடுக்க முயன்ற மலேசிய வீரர் முகமது ஃபாரிஸ், எதிர்பாராதவிதமாக பந்தைத் தனது சொந்த கோல் கம்பத்துக்குள்ளேயே அடித்து விட்டார்.

இதன் மூலம் வியட்நாம் 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டு கோல்கள் பின் தங்கியிருந்த போதிலும், மலேசிய அணி கோல் இடைவெளியைக் குறைக்கத் தொடர்ந்து போராடியது.

90-வது நிமிடத்தில் ஜி.பவித்திரன் அடித்த பந்து இலக்கைத் தவறவிட்டது. அதனைத் தொடர்ந்து, பிற்பாதியின் கூடுதல் நேரத்தில் முகமது ஃபாரிஸ் ஒரு கடினமான கோணத்தில் இருந்து அடித்த பந்தை பேட்ரிக் தடுத்து நிறுத்தினார்.

இந்தத் தோல்வியின் மூலம், 2010-ஆம் ஆண்டு வெற்றியாளரான மலேசியா, வரும் புதன்கிழமை ஹனோயில் நடைபெறவுள்ள இரண்டாம் அரையிறுதியில் மேலும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.