
செர்டாங், ஆகஸ்ட் 16 — சுக்மா 2026 இல் ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு சிலாங்கூர் அணியைச் சேர்ந்த மூன்று ஓட்டப்பந்தய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இன்று புத்ரா மலேசியா பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மகளிர் பிரிவில் நூர் காசே கியாசத்தினா நுருல் ஹிஷ்யாம் மற்றும் லிம் மேய் யின் ஆகிய இருவரும் இறுதிச்சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தனர்.
அதேவேளையில், ஆடவர் பிரிவில் டேனிஷ் இர்ஃபான் தம்ரின் 100 மீட்டர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
மேய் யின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றதுடன், தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தையும் அவர் முறியடித்தார்.
முன்னதாக 12.20 வினாடிகளாக இருந்த அவரது தனிப்பட்ட சாதனையை, இன்று 12.12 வினாடிகளில் ஓடி அவர் புதிய சாதனையாகப் பதிவு செய்தார்.
ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன.
இதில் சிலாங்கூரின் மூன்று ஓட்டப்பந்தய வீரர்களும் தங்களது மாநிலத்துக்கு பதக்கங்களைப் பெற்றுத்தரும் முனைப்புடன் களமிறங்கவுள்ளனர்.







