
ஷா ஆலாம், ஆகஸ்ட் 15 – சுக்மா போட்டி களத்தில் சிலாங்கூரின் பதக்க வேட்டைத் தொடரும் நிலையில், இன்று ஜூடோ, கடற்கரை கைப்பந்து போட்டிகளில் அவ்வணி தங்கம் வென்றது.
சிலாங்கூரின் ஜூடோ வீரர் முஹம்மட் அஷ்ரப் முகமட் கைருடின், ஆண்களுக்கான 81 கிலோகிராமுக்கு உட்பட்ட பிரிவில் வெற்றிப் பெற்று, சொந்த மாநிலத்திற்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
ஷா ஆலாம் ஐடிசிசி (IDCC Shah Alam) வளாகத்தில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், திராங்கானு மாநிலத்தின் முஹம்மட் அம்ஸ்யார் அசிசியை 'கோல்டன் ஸ்கோர்' (Golden Score) கூடுதல் நேர ஆட்டத்தில் 'இப்பொன்' (Ippon) யுக்தியின் மூலம் வீழ்த்தி முஹம்மட் அஷ்ரப் இந்த வெற்றியை உறுதி செய்தார்.

நேற்றைய தினம் மகளிர் பிரிவில் சிலாங்கூர் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, ஜூடோ பிரிவில் மாநிலத்திற்கு கிடைத்த இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
இதற்கிடையில், ஆண்களுக்கான 66 கிலோகிராமுக்கு உட்பட்ட பிரிவில் களம் கண்ட சிலாங்கூர் வீரர் செபாஸ்டியன் சீ சென் யி, பகாங் மாநில வீரர் அம்மார் ஹாசிக்கை 'இப்பொன்' முறையில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
2026 சுக்மா மகளிர் கடற்கரை கைப்பந்துப் போட்டியில் சிலாங்கூருக்கு தங்கம்
2026 சுக்மா மகளிர் கடற்கரை கைப்பந்து (Beach Volleyball) பிரிவில் ரேச்சல் கோ யூ ஜியே மற்றும் கோ யூ ஹெங் உடன்பிறந்த ஜோடி, பினாங்கு ஏ அணியை வீழ்த்தி
சிலாங்கூருக்கு தங்கப் பதக்கத்தைப் பரிசளித்தனர்.
முதல் செட்டை இழந்த போதிலும் மனம் தளராமல் போராடிய அந்த வெற்றியை அந்த சகோதரிகள் பதிவு செய்தனர்.
ஷா ஆலாம் நகராண்மைக் கழக (MBSA) கடற்கரை கைப்பந்து மைதானத்தில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், சொந்த மாநில ரசிகர்களின் ஆதரவோடு களம் இறங்கிய சிலாங்கூர் ஜோடி, முதல் செட்டை 16-21 என பினாங்கிற்கு பறிகொடுத்தது.
எனினும், அடுத்த இரு செட்களிலும் அதிரடியாக மீண்டெழுந்து 21-17, 15-11 என்ற கணக்கில் பினாங்கு அணியை வீழ்த்தி வெற்றிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

வெற்றிக்குப் பின்னர் பேசிய ரேச்சல் , சுக்மா போட்டியில் முதன்முறையாகக் தடம் பதிக்கும் தனது தங்கை யூ ஹெங்குடன் இணைந்து இந்த வெற்றியை சாதித்திருப்பதாக தெரிவித்தார்.
"இது ஒரு அசாதாரணமான வெற்றி. முதல் செட்டில் தோற்றபோதும் நாங்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை. இந்த வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த எனது பயிற்சியாளருக்கும், தங்கைக்கும் நன்றி," என்று ரேச்சல் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அதே வேளையில், 16 வயதே ஆன யூ ஹெங், தனது முதல் முயற்சியிலேயே அக்காவுடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றதை இன்னும் நம்ப முடியவில்லை என்றும், இது தனக்குக் மட்டற்ற மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆடவர் பிரிவில் பேராக் ஏ அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிய வேளை, சிலாங்கூர் அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறிவிட்டது.







