கோலாலம்பூர், ஆகஸ்ட் 14: புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையின் (NKVE) டாமன்சாரா - ஷா ஆலம் இடையிலான வழித்தடத்தில், 13.60கி.மீ முதல் 14.35கி.மீ வரை (இரு திசைகளிலும்) இன்று முதல் ஆறு மாதங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படவுள்ளது.
இந்த தற்காலிக மாற்றம் இன்று தொடங்கி வரும் 2027 பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று பிளஸ் மலேசியா (PLUS) நிறுவனம் தெரிவித்தது.
இந்த நெடுஞ்சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கான மேம்பாலக் கட்டுமானப் பணிகள் மற்றும் பினாகல் ஹோம்ஸ் ஏடி நிறுவனத்தின் (Pinnacle Homes AD Sdn Bhd) பராமரிப்புப் பணிகளுக்கு வழிவிடுவதற்காக இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வாகனமோட்டிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்துப் போக்குவரத்து அடையாளப் பலகைகளையும், பிளஸ் பணியாளர்களின் அறிவுறுத்தல்களையும் முறையாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாகனமோட்டிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும், பிளஸ் செயலி (PLUS App), எக்ஸ் (X) தளத்தில் உள்ள @plustrafik அதிகாரப்பூர்வப் பக்கம் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் உள்ள மின்னணு தகவல் பலகைகள் (VMS) மூலமாக உடனுக்குடன் போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொள்ளுமாறும் பிளஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், வாகனமோட்டிகள் உதவிக்காக 1-800-88-0000 என்ற எண்களில் பிளஸ்லைன் (PLUSLine) கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.







